சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார்




ம.பா.மகாலிங்கசிவம்

நாவலர் என்றவுடன் எவ்வாறு ஆறுமுகநாவலரின் நினைவு வருகிறதோ, அவ்வாறே சைவப்பெரியார் என்றவுடன் சைவப்பெரியார் சு.சிவபாரதசுந்தரனாரின் நினைவு தான் வரும். நாவலரின் பின்னர் நாவலரின் பணிகளான சைவசமயக் கருத்துக்களை விளக்கும் நூல்களை வெளியிடுதல், பிரசங்கங்கள் செய்தல், பாடசாலைகள் அமைத்தல், திருக்கேதீச்சர ஆலயத்தைப் புனரமைத்தல் என்பவற்றைத் தொடர்ந்து செய்தவர் சைவப்பெரியார்.

இவர் புலோலியைச் சேர்ந்த சுப்பிரமணியபிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக 17.01.1878 இல் பிறந்தார். இவர் பிறந்த குடும்பம் சிறந்த கல்வியறிவு மிக்க குடும்பமாகும். தந்தையரான சுப்பிரமணியபிள்ளைக்கு ஏழு சகோதரர்கள். அவர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜாவின் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். அது மட்டுமின்றித் திருவனந்தபுரம் மகாராஜாக் கல்லூரியிலும் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். வடமொழியிலுள்ள இரகுவம்சம், பில்ஹணீயம் என்னும் நூல்களை மணிப் பிரிவாள நடையில் மொழி பெயர்த்தவர்.

சுப்பிரமணியப்;பிள்ளையின் மற்றைய சகோதரர் வ.குமாரசுவாமிப்புலவர், இலக்கண இலக்கியங்களில் வல்லவராக விளங்கியதுடன் சாதாரணமாகப் பேசும் போதும் இலக்கண மரபுப் படி பேசியதால் 'இலக்கணக் கொட்டர்' என்று அழைக்கப்பட்டவர்.

சுப்பிரமணியப்பிள்ளையின் சகோதரிகளில் ஒருவரே பார்வதி அம்மையார். இவர் வான்மீகத்தைச் சமஸ்கிருதத்தில் வாசித்து விளக்கம் சொல்வதிலும் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களைக் கதை சொல்வது போற் கற்பிப்பதிலும் வல்லவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித பரீட்சையிலே தங்கப் பதக்கம் பெற்ற பண்டிதையான வாலாம்பிகையைத் தமது கற்பித்தல் மூலம் உருவாக்கியவர்

இத்தகைய கல்விப் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலே தோன்றிய சிவபாதசுந்தனாரர், சிறுவயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லவராக விளங்கினார். இவருக்குத் தமிழ் கற்பித்தவர் மாமியாரான பார்வதி அம்மையார், சிவபாதசுந்தரனார் தமது அகநூலைப் பார்வதி அம்மையாருக்கே காணிக்கையாக்கி, அவரைத் தவச்செல்வி என்றும் போற்றியுள்ளார். புலோலி வேலாயுதம் பாடசாலையிற் கல்வி கற்ற சிவபாதசுந்தரனார் தமது ஆங்கிலக் கல்வியை அங்கேயே பெற்றுக் கொண்டார்.

பாடசலைக் கல்வி நிறைவடைந்ததும் தந்தையார் மேற்படிப்புக்காக இவரை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இவரது சிறிய தந்தையார் கணபதிப்பிள்ளை பேராசிரியராக இருந்த திருவனந்தபுரம் மகாராஜாக் கல்லூரியிலே கற்கச் செய்தார். இங்கு கற்ற காலத்திலே தமது சிறிய தந்தையாரிடம்சமஸ்கிருதத்தை ஐயந்திரிபறக் கற்றுக் கொண்டார்.
மகாராஜாக் கல்லூரியில் எப்.ஏ (கு.யு) வகுப்பிற் சித்தி பெற்ற பின்னர், திருச்சி சென்.யோசேப் கல்லூரியிலே கற்றுக் கலைமாணிப் (டீ.யு) பட்டத்தை பெற்றுக் கொண்டார். கணிதம், தருக்கம் ஆகிய இரண்டும் இவரது பிரதான பாடங்கள் ஆகும். மேலை நாட்டுத் தத்துவ நூல்கள், தருக்க நூல்கள் என்பவற்றைக் கற்கும் வாய்ப்பு இவருக்கு இங்கே தான் கிடைத்தது.

தமிழ் நாட்டில் பட்டம் பெற்று, யாழ்ப்பாணத்தின் முதற் சைவப் பட்டதாரி என்ற பெருமையுடன் இவர் யாழ்ப்பாணம் திரும்பி வந்தார். முதலிற் புலோலியில் உள்ள சைவப் பாடசாலையிலும் பின்னர் புலோலி வேலாயுதம் பாடசாலை, கொழும்பு பொன்னம்பலம் பள்ளி என்பவற்றிலும் கற்பித்து, திருகோணமலை சென்.யோசப் கல்லூரியிலே தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். யாழ்.பரமேஸ்வராக் கல்லூரியிலும் அதிபராக் கடமை ஆற்றினார். இறுதியாக 1924ஆம் ஆண்டு தொடக்கம் ஓய்வு பெற்ற 1933ஆம் ஆண்டு வரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் அதிபராகப் பெரும்பணி ஆற்றினார்.

அடுத்து அவரது சமயப் பணியாக, நாலவரின் வழியைப் பின்பற்றி, சைவ சமய உண்மைகளை மாணவர்களுக்கும் ,மக்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறப் பல நூல்களை எழுதினார்.
சைவ மாணவர்களுக்கான நூல்கள்
1. முதலாம், இரண்டாம், மூன்றாம் சைவ போதங்கள்
2. திருவருட்பயன் உரை
3. திருக்குறள் மணிகள்
4. திருவாசக மணிகள்
5. சைவ சமய சாரம்
6. சைவ சமயத்தின் பெருமை
7. கிரிசாம்பாள் கதை
8. துளசித்தாமன் கதை
சைவ மக்களுக்காய் எழுதியவை
1. சுப்பிரமணியப் பெருமானுடைய திருப்பெருவடிவம்
2. சைவக் கிரியை விளக்கம்
3. கந்தபுராண விளக்கம்
4. அப்பர் சுவாமிகளின் தேவாரச் சிறப்பு
5. கற்பிக்கும் முறைகளும் விதிகளும்
சமயத்தோடு நேரடித் தொடர்பற்ற பட்டப் படிப்பு மாணவருக்காய் எழுதியவை
1. அக நூல்
2. அளவை நூல்
பிற நாட்டார்க்குச் சமயக் கருத்துக்களைக் கூறுபவை
1. வுhந ளுயiஎய ளுஉhழழட ழக ர்iனெரளைஅ
2. யுn ழரவடiநெ ழக ளுiஎயபயெயெ டீழனாயஅ றiவா ய சநதழiனெநச வழ ய ஊhசளைவயைn உசவைiஉ
3. யுசரஅரபய யேஎயடயச
4. புடழசநைள ழக ளுயiஎயளைஅ
இவற்றுள், அளவை நூல் 1953ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு அப் பல்கலைக்கழகத் தத்துவத்துறைத் தலைவர் ஆர்.இராமனுஜாச்சாரி முகவுரை எழுதியுள்ளார். அக நூல் 1935இல் சென்னையில் பதிக்கப்பட்டது.
வுhந ளுயiஎய ளுஉhழழட ழக ர்iனெரளைஅ என்னும் நூல் இலண்டனிலுள்ள அலன் அன்வின் என்னும் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டமை இந்நூலின் தரத்தை விளக்குகிறது. இது மேலைத் தேயத்தோர்க்குச் சைவ சமய உண்மைகளை எடுத்துக்கூறுவது. இந்நூலுக்குக் கார்டிப் பல்கலைக்கழகப் பேராசிரியரான மக்கென்சி என்பவர் அணிந்துரை வழங்கினார்.

சைவப் பெரியார் மேற்கொண்ட ஆலயப் பணிகளில் முக்கியமானது திருக்கேதீச்சரப் பணியாகும். திருக்கேதீச்சரம் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும் என்ற நாவலரின் நீண்ட நாட் கனவை நிறைவேற்றுவதற்காகப் பலரின் உதவியுடன் 1948இல் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையை நிறுவி அதன் தலைவராக 1952 வரை பணியாற்றினார். தமது முதற் பணியாகச் செங்கற்களால் ஆக்கப்பட்டுச் சிறிய கோயிலாக இருந்த திருக்கேதீச்சரத்தைப் புதுப்பித்து 1952இலே கும்பாபிஷேகம் நிகழ வழி செய்தார். இங்கு வரும் அடியார்கள் தங்கிப் போக விசாலமான மண்டபத்தை அமைத்து அதற்குத் திருஞானசம்பந்தர் மடம் என்றும் பெயரிட்டார். சிவபெருமான் ,அம்பாள் ஆகியோரின் எழுந்தருளி விக்கிரகங்களையும் அன்பளிப்புச் செய்தார்.

இலங்கை அரசின் கல்வி ஆலோசனைச் சபை, கன்னங்கரா கல்வி விசாரணைச் சபை என்பவற்றிலும் சைவப் பெரியார் அங்கத்தவராய் இருந்தார். 1928ஆம் ஆண்டு தொடக்கம் 1930 ஆம் ஆண்டு வரை சைவ வித்தியா விருத்திச்  சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். 1930 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற யாழ்;பபாண வாலிபர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். இம் மகாநாட்டில் இவரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சம ஆசனம், சமபந்தி போசனம் என்பவை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இது உயர்குடியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியதாற் பல்வேறு குழப்பங்களும் செய்யப்பட்டன. எனினும் தனது முயற்சியிலே தளராத சைவப் பெரியார் தலைமையுரையிலே, வருணாச்சிரம தர்மம் தொழிலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. அதிலே தீண்டாமைக்கு இடமில்லை என்னும் கருத்தை வலியுறுத்திக் கூறினார்.

விக்ரோறியாக் கல்லூரியிற் கற்பித்த காலத்திலே சுழிபுரத்தைச் சூழ உள்ள பகுதிகளில் சைவப் பள்ளிகள் நிறுவுவதில் ஈடுபட்டார். இவ்வகையில் மூளாயில் கந்தையா உபாத்தியாரிடம் தனது கருத்தைத் தெரிவித்து மூளாய் சைவப் பிரகாசப் பாடசாலையைக் கட்டுவித்தார். அது மட்டுமன்றி தனது உறவினர்களான ஆசிரியர் தம்பு, பண்டிதர் ம.வே.மகாலிங்கசிவம் போன்றவர்களை ஆசிரியர்களாகவும் அனுப்பினார். கொச்சிக்கடை பொன்னம்பலம் பாடசாலையிலே தலைமை ஆசிரியராக இருந்த காலத்திலே இவர் கேட்டுக் கொண்டதன் படியே சேர்.பொன்.இராமநாதன், யாழ்.பரமேஸ்வராக் கல்லூரியை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு நாவலர் அடிச்சுவட்டிற் சைவப் பணிபுரிந்து சைவ வாழ்வு வாழ்ந்த சைவ பெரியார் சு.சிவபாதசுந்தரனார் 14.08.1953 இலே இவ்வுலக வாழ்வை நீத்தார்.


நன்றி இலக்கியப்பூக்கள்

No comments:

Post a Comment