'உயர்குடி நனிஉள் தோன்றல் ஊனமில் யாக்கையாதல்
மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லராதல்
பெரிதுண ரறிவேயாதல் பேரறங் கோட லென்றாங்கு
அரிதிவை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பர்'
என்னும் 'வளையாபதி' கூற்றுக்கமைய குன்றாக்குடி பிறந்த வல்லாளராகவும் கோதில்லாக் கவின் தமிழ்ச் சொல்லாளராகவும் இன்னுரை ஈயும் எழில்மாண் ஒள்ளியராகவும் விளங்கும் புலவர் பார்வதிநாதசிவம் இளநகை மிளிர உரையாடும்;, தக்காரைத் தகவுணர்ந்து மதிக்கும் தண்ணியர், பன்னூல் தந்த நுண்மாண் குரிசிலர்.
'தக்கார் தகவிலார் என்பது அவரவர்என்னும் பொய்யாமொழியாரின் பொன்மொழிக்கமைய நாவலரின் நன் மாணாக்கருள் ஒருவரான மட்டுவில் க.வேற்பிள்ளையின் வழித்தோன்றலான புலவர் பார்வதிநாதசிவம் யாழ்ப்பாணத்தில் எட்டுணையும் வஞ்சமின்றி எழில் கொஞ்சும் மாவிட்டபுரக் கிராமத்தில் குருகவி மகாலிங்கசிவத்திற்கும் அருமைமுத்து என்பாருக்கும் 1936 தை 14இல் மகனாகப் பிறந்தார்.
எச்சத்தால் காணப் படும்'
இவருடைய தந்தையார் மகாலிங்கசிவம் சிறந்த தமிழறிஞர், பன்மொழி அறிவு மிக்கவர். 'இவர் வடமொழி, ஆங்கிலம், ஹிந்துஸ்தானி, ஹிந்தி, உருது முதலான மொழிகளைக் கைவரப் பெற்றவராகையால் இவர் அறிவு மிக விரிந்து சுடர்கான்று விளங்கிற்று' என இந்து சாதனத்தில் (1941.02.24) துணைப்பத்திரிகாசிரியரால் சிறப்பிக்கப்பட்டவர். மூளாய் சைவப்பிரகாச பாடசாலையிலும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் தமிழாசிரியராக கடமையாற்றிய இவர் 1923ல் இருந்து தான் இறக்கும் வரை ஏறத்தாழ 17 வருடங்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பன்னிரண்டாவது வயதில் பழனிப் பதிகம் பாடியதால் குருகவி எனவும் அழைக்கப்பட்டவர். 'காமாட்சி அன்னை', 'புன்னெறி விலக்கு' முதலிய தனிப்பாடல்களின் ஆசிரியரான இவர் சிறுகதை யாசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர். இவருக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளில் நாலாமவரே புலவர்.
இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் கல்வி கற்பித்த வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற பார்வதிநாதசிவம் தன் இரண்டாம் நிலைக் கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் தொடர்ந்தார். அப்போது அக்கல்லூரியில் கவிஞராக, நாடக ஆசிரியராக, பேச்சாளராக விளங்கிய 'செ.கதிரேசம்பிள்ளை' ஆசிரியரிடம் யாப்பிலக்கணத்தை முழுமையாக கற்றார். அத்துடன் பாரதியார், பாரதிதாசன் பாடல்களின் இலக்கிய நயங்களையும் அதனியங்களின் செவ்வியல் கூறுகளையும் புலவருக்கு அறிமுகப்படுத்தினார்.
புலவரின் ஆரம்பகால இலக்கிய முயற்சியாக 'வளர்மதி' சஞ்சிகையில் வெளிவந்த கவிதையாக்க முயற்சிகளைக் கூறலாம். யா{மகாஜனக் கல்லூரியிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பிரதியான நகைச்சுவை, துணுக்கள் முதலான அம்சங்கள் பலவற்றைக் கொண்ட பல்சுவை இதழாக வளர்மதி வெளிவந்தது. இச்சஞ்சிகைகளில் இவரெழுதிய கவிதைகள் கற்றோராலும் மற்றோராலும் நன்கு மதிக்கப்பட்டன. 'ளுநnழைச ளஉhழழட உநசவகைiஉயவந' எனப்படுகின்ற சிரேஷ்ட கல்வித்தரத்தில் பயில்கின்ற பொழுது இவரெழுதிய கவிதைகள் வீரகேசரி, சுகந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் இரண்டாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்து கொண்டு மேற்கல்விக்காகத் தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கிருந்த காலத்தில் வித்துவான் அருணாசலம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், பேராசிரியர் அ.சிதம்பரநாதச் செட்டியார், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் முதலானோரிடம் கொண்ட தொடர்பு அவரின் அறிவுப்புலத்தை நன்கு வளர்த்துக் கொள்ள உதவியது. கல்வி கற்கும் காலப்பகுதியில் பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட ஆர்வத்தினால் பாண்டிச்சேரிக்குச் சென்று பாரதிதாசனை அடிக்கடி நேரிலே சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். இத்தொடர்பு 1957ஆம் ஆண்டில் தொடங்கிப் பல்கலைக்கல்வி நிறைவடையும் வரை நீடித்தது. இத்தொடர்பே பார்வதிநாதசிவத்தைச் சமூகப் பிரக்ஞை மிக்க, எழுச்சியும் ஆற்றலுமுடைய, ஆளுமை நிறைந்த நவீன கவிஞனாக உருவாக்கியது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் நெறியைத் தெரிவு செய்து நான்கு வருடங்கள் கற்றுத் தேர்ந்த பின் 1961இல் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இயங்கிய இராமநாதன் அக்கடமியில் தமிழாசிரியராக உத்தியோகப்பணியைத் தொடங்கினார். அக்காலப்பகுதியில் இராமநாதன் கலைக்கழகத்தில் லண்டன் பி.ஏ வகுப்பு மாணவர்களை அறிவுத்துறையில் தயார்ப்படுத்தினார். இக்கழகத்தில் இவராற்றிய தமிழ்ப் பணி விதந்து பாராட்டத்தக்கது. இதனையடுத்து இவரது தமிழாசிரியப் பணி கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் தொடர்ந்தது. 1978களின் பின் ஆசிரியப்பணியிலிருந்து முற்றாக விலகிய பார்வதிநாதசிவம் அவர்கள் பத்திரிகைத்துறையுடன் தம் வாழ்வை இணைத்துக் கொண்டார்.
1979இல் 'ஈழநாடு' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பண்புரிந்த இவர், அங்கு எஸ்.கோபாலரத்தினம் என்பாரது நெருக்கமான தொடர்பினால் பத்திரிகைத்துறையில் நிறைந்த அறிவினைப் பெற்றுக் கொண்டார். கவிதையுள்ளங்கொண்ட பார்வதிநாதசிவம் பத்திரிகைத் துறையில் நுழைந்தமையால் யாவரும் படித்துணரும் வண்ணம் எளிய நடையில் எழுதலானார். திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்களைப் போல் தமிழாசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கிருந்தமையால் எளிய நடை கைவரப்பெற்ற வல்லாளராகவும் விளங்கினார். இதனை ஈழநாடு, முரசொலி, சஞ்சீவி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் உறுதிப்படுத்தி நின்றன. எளிமையும் நேரடியாகக் கருத்துக் கூறுதலும் பத்திரிகையின் நடையாக இருப்பதால் பார்வதிநாதசிவத்தின் கட்டுரைகளும் இவ்வகையிலேயே அமைந்தன.
ஈழநாட்டில் வாரமலர் ஆசிரியராகப் பணியாற்றிய காலப்பகுதியில் 'அறிவும் அனுபவமும்' என்னும் புதிய பகுதியை ஆரம்பித்தார். இப்பகுதியில் இயல், இசை, நாடகம் சார்ந்த பல்துறை அறிஞர்களையும் சாதனையாளர்களையும் பேட்டி கண்டு எழுதினார். பேராசிரியர் சு.வித்தியானந்தன், (19.10.1986) சிரித்திரன் ஆசிரியர் செ.சிவஞானசுந்தரம், கலையரசு எஸ்.சொர்ணலிங்கம் புலவர் சிவானந்தன் (5.10.1986), கலைச்செல்வி சிற்பி (12.10.1986) வரதர் (26.10.1986), வானொலிக் கலைஞர் சக்கடத்தார் ராஜரத்தினம், ஏ.ரி.பொன்னுத்துரை (16.11.1986), செங்கை ஆழியான் (14.12.1986). கலாநிதி நா.சுப்பிரமணியன் (28.12.1986), சி.வைத்திலிங்கம், கே.எஸ்.ஆனந்தன் முதலானோர் இவ்வகையில் இவரால் பேட்டி கண்டு எழுதப்பட்டவர்கள். அத்துடன் 'தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதர் வீரகத்தியின் பணி' என்ற தலைப்பில் பண்டிதரையும் (27.01.1985) பேட்டி கண்டு எழுதியுள்ளார். ஈழத்தமிழறிஞர்களின் அனுபவத்தினையும் ஆளுமைத்திறனையும் வெளிக்கொணரும் வகையில் அமைந்த இப்பகுதி 'முரளி', 'சிவம்' என்னும் புனைபெயர்களிலேயே புலவரால் பேட்டி எடுக்கப்பட்டது. பண்டிதர் வீரகத்தியின் பேட்டி மாத்திரம் பார்வதிநாதசிவம் என்னும் பெயரில் புலவரால் எடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் வித்தியானந்தனின் ஆரம்ப கால நாடகமுயற்சிகள் தொடர்பாகவும் அவரின் சமகால இலக்கியப் பணிகள் தொடர்பாகவும் புலவரால் வினாவப்பட்ட வினாக்கள் பேராசிரியரின் முழுமையான ஆளுமைத்திறனை வெளிக்கொணரும் முயற்சிகளாகும். 1946இல் 'நிழல்கள்' நாடகத்தைத் தயாரித்து அரங்கேற்றியதாகக் கூறும் வித்தியானந்தன் அவர்கள் , 1948இல் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் பொருளோ பொருள், சங்கிலி, உடையார் மிடுக்கு ( 1952), சுந்தரம் எங்கே?, துரோகிகள் நாடகங்களையும் அரங்கேற்றிய காலப் பின்னணியையும் எடுத்துரைப்பார். அத்துடன் பேராசிரியர் வித்தியானந்தன் தாமே 'இராவணேஸ்வரன்','கர்ணன் போர்' என்னும் கூத்துக்களை மீளுருவாக்கம் செய்தமையையும் விபரிக்கிறார். வித்தியானந்தன் அவர்களின் ஆரம்ப காலப்பணிகளை நினைவுகூரும் இப்பேட்டி இன்றைய ஆய்வாளருக்கு இன்றியமையாத தகவல்களை வழங்குகின்றது.
இதனைப் போன்று கலைச்செல்வி சிற்பி அவர்களின் பேட்டியும் முக்கியமானது. செங்குந்தாவிலிருந்து சிற்பியவர்களால் கொண்டுவரப்பட்ட சுடரொளி சஞ்சிகையையே க.பரராஜசிங்கம் (துருவன்) யாழ்நங்கை, பேராசிரியர் சிவச்சந்திரன் முதலானோருக்கு களம் அமைத்துக் கொடுத்தது என்னும் அரியதகவலைப் பரிமாறும் இப்பேட்டி தென்மராட்சிப் பாடசாலைகளில் ஒன்றான உசன் பாடசாலையே அப்பகுதியில் பாடசாலை மட்டத்தில் முதல் சஞ்சிகையை வெளியிட்டது என்னும் தகவலையும் பரிமாறிக்கொள்கிறது. இவ்வகையில் இக்காலப்பகுதியில் இப்பாடசாலை யின் அதிபராக இருந்த சிற்பி அவர்களே 'இளந்தளிர்' சஞ்சிகையின் உருவாக்கத்திற்கும் கால்கோளாயிருந்தார். மற்றோரால், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரால் அறியப்படாத அரிய பலதகவல்களைக்கூறும் இப்பேட்டி இற்றைவரை முழுமையாக அறியப்படாத இலக்கிய மேதைகளையும் அறிமுகம் செய்கிறது.
இவ்வகையில் செஞ்சொற் செல்வர் சிவானந்தன், வானொலிக் கலைஞர் ராஜரத்தினம், நாடகக்கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை, பண்டிதர் க.வீரகத்தி முதலானோரின் அனுபவப் பகிர்வுகள் முக்கியமானவை. நவீன ஆய்வுக்கு கால்கோளாய் அமையும் இப்பேட்டிகள் முழுமையாக இனிவருங் காலங்களில் தொகுக்கப்படுமிடத்து ஈழத்துப்பெரியார்களது அறிவு, அனுபவம், ஆற்றல்களைத் தமிழ் உலகம் அறிந்து கொள்ள வழிசெய்யும்.
இப்பணியில் மு.வாமதேவனுக்கு வழிகாட்டியாக அமைந்த புலவர் அப்பணியில் அவருயர்வுக்கு ஆதார சுருதியாகவும் இருந்தார். இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக 'அறிவும் அநுபவமும்' பகுதியில் மு.வாமதேவனால் எடுக்கப்பட்ட இசைப்புலவர் சண்முகரத்தினம் (30.11.1986), குறமகள் (9.11.1986) முதலானோரின் பேட்டிகள் அமைகின்றன. ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் வெளிப்பாட்டுத் திறனை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியவர் என்னும் வகையில் புலவரின் இடமும் இருப்பும் என்றைக்கும் எப்போதும் நிலைத்திருக்கும்.
இயல்பாகவே கவிதையுள்ளம் கொண்டவராகப் புலவர் இருந்தமையால் ஈழநாடு வாரமலரில் இடம்பெற்ற கவிதைகளும் காத்திரத்தன்மை கொண்டவையாக விளங்கின எனலாம். கலை நேர்த்தி கொண்ட கவிதைகளை 'முருகையன்', 'கரவைகிழார்', 'ச.வே.பஞ்சாட்சரம்', 'யோ.பெனடிக் பாலன்', 'காரை சுந்தரம்பிள்ளை', 'ஓட்டமாவடி அஸ்ரஃப்', 'க.சச்சிதானந்தன்', 'செ.மகேந்திரன்', 'சிற்பி', 'முருகு', 'வாகரை வாணன்', 'சத்தியசீலன்' என ஏராளமான இன்னபிற கவிஞர்கள் எழுதினார்கள். இக்காலப்பகுதியில் ஈழநாடு மரபுக்கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது. யோ. பெனடிக்பாலன், ஓட்டமாவடி அஷ்ரஃப், முதலான கவிஞர்கள் பலரின் புதுக்கவிதையால் ஈழநாடு வளம்பெற்றது எனலாம்.
ஈழநாட்டில் பத்துவருடங்கள் அலுக்காது சலியாது தொடர்ந்து பணியாற்றிய புலவர் நாட்டின் அசாதாரண சூழலால் 'ஈழநாடு' மூடப்பட்டதை அடுத்து 1989இல் முரசொலியின் துணையாசிரியராகப் பணியாற்றினார். இக்காலப்பகுதி புலவரின் வாழ்வில் பொற்காலமாகும். புலவரின் வாழ்வில் புலமையையும் இலக்கியச் செழுமையையும் யாவரும் உணரும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமை முரசொலிச்சஞ்சிகையே சாரும். முரசொலியின் உதவியாசிரியராகப் பணியாற்றிய புலவர் சிறிதுகாலத்தின்பின் வாரமலரின் ஆசிரியராகவும் பணியாற்றினார். கவிதை (ஈழத்துக் கவிஞர் பக்கம்), சிறுவர் பகுதி (பூஞ்சிட்டு), கட்டுரை, சிறுகதை, எனப் பன்முகத்தளத்தில் விரிந்த வாரமலர் இலக்கிய ஆர்வலருக்கு நிறைந்தளவு தீனி போட்;டது எனலாம். இவர் சேவையாற்றிய காலப்பகுதியில் முரசொலிப்பத்திரிகை இடைநடுவில் நிறுத்தப்பட 1992இல் உதயன் பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு வரை இப்பணி தொடர்ந்தது. இவர் தொடர்ந்து வாரமலரான சஞ்சீவியில் பணியாற்றிய காலப்பகுதியில் இவரின் பணி விதந்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் இளம்படைப்பாளர் பலரைச் சஞ்சீவியூடாக உலகறிய அறிமுகப்படுத்திய பெருமை புலவரையே சாரும்.
மஹாகவி (உருத்திமூர்த்தி) அவர்களால் 'எமது எதிர்கால எதிர்பார்ப்பு' எனச் சுட்டி உரைக்கப்படும் பார்வதிநாதசிவம் மரபாலும் புறச் சூழலாலும் பயிற்சியாலும் தமிழ்ப்புலமையாலும் தமிழ்க்கவிதைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர். மரபுச்சட்டத்துக்குள் ஆழ்ந்த பொருள் மிக்க கவிதைகளைப் படைத்த பார்வதிநாத சிவம் 1972இல் வெளிவந்த 'காதலும் கருணையும்' என்ற நூலினூடாகப் பரவலாக அறியப்பட்டவர். 'காதலும் கருணையும்' என்னும் குறுங்காவியத்தடன் 21 தனிக்கவிதைகளைத் தாங்கி வந்த இந்நூல், தமிழிலக்கிய உலகில் பெரும் கவனத்தைப் பெற்றது.
இவரின் 'காதலும் கருணையும்' என்ற குறுங்காவியம் 64 விருத்தப்பாக்களால் ஆனது. எழில் நிலம் என்ற ஊரில் கல்வி போதிக்கும் குருவின் தூய காதலை விளம்பி நிற்கும் இந்நூல் உயர்ந்த நோக்கும் தியாக சிந்தனையுமுடைய மனித ஆன்மாவின் உன்னத தன்மையை எடுத்துரைக்கிறது. சேவை நலன் கொண்ட பெண்ணுக்காகத் தன் கண்ணை இழந்த குருவினுடைய உயர்ந்த உள்ளம் புலவரால் உயிர்த்துடிப்புள்ள ஓவியமாய் தீட்டப்படுகிறது. பண்டைய மரபின், அகத்திணையின் எச்சமாக எஞ்சி நிற்கும் இக்காவியம் என்றுமே அழியாத மகாசிருஷ்டியாகும்.
புலவருடைய பிறிதொரு நூலான 'இருவேறு உலகம்' என்னும் நூலும் தூய காதல் ஒழுக்கத்தை பேசும் நூலாகும். 35 விருத்தப்பாக்களாலும் 4 ஆசிரியப்பாக்களாலும் ஆன இக்குறுங் காவியம் சமூக ஏற்றத்தாழ்வுகளால் நிறைவேறாத காதலைப் பேசுகிறது. பண்டைய அகத்திணை மரபிலிருந்து பிறழ்ந்து பெயர் சுட்டிப் பாடப்படும் இக்காதல் ஒரு பாடலில் ஒரு செய்தி என்னும் கருத்து நிலையிலிருந்தும் மாறுபடுகின்றது.
1985இல் வெளிவந்த 'இரண்டு வரம் வேண்டும்' 1988இல் வெளியிடப்பட்ட 'இன்னும் ஒரு திங்கள்' என்னுமிரு குறுங்காவியங்களும் கூட அகம் சார்ந்த காதலையே பேசும் நூல்களாகும். 'கலைஞன் வருகை' முதல் 'கேட்டவரம்' ஈறாக 17 உபதலைப்புக்களில் அமைந்த 'இரண்டு வரம் வேண்டும்' என்னும் குறுங் காவியம் 126 விருத்தப்பாக்களால் ஆனது. சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து நிறைவேறும் உண்மைக்காதலைக் கூறும் இக்காவியம் மனித நேயத்தோடு சமூக வாழ்வியலைப் பேசுகிறது. தாய்க்குக் கடன் கழித்து வாழ்வதே தன் இலட்சியம் எனக் கூறி வாழும் கல்யாணிப் பாத்திரம் புலவரால் கச்சிதமாகப் படைக்கப்பட்ட கனதியான பாத்திரங்களில் ஒன்றாகும்.
மத்திய தரவர்க்கத்தின் நடப்பியல் வாழ்வியலைப்பாடும் புலவரின் பிறிதொரு காவியம் 'இன்னுமொரு திங்கள்' ஆகும். 170 விருத்தப்பாக்களாலும் 3 ஆசிரியப் பாக்களாலும் ஆன இக்குறுங்காவியம் சந்தேகம் என்னும் கொடுநோய்க்கிரையான கணவனை அன்பாலும் பரிவாலும் திருத்தும் ஒரு பெண்ணின் மகோன்னத வாழ்வியலைச் சித்திரிக்கிறது.
'தனிமனிதனின் செயலும் பேச்சும் பிறரை எட்டுவனவாக அமையின் அவை சிறந்து விளங்கவேண்டும்' என்னும் கூற்றுக்கமைய குறுங்காவியத்தில் புலவரால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் இலட்சியத்தன்மை கொண்டவை. மனிதன் பற்றிய உயரிய எண்ணக்கருக்களை விதைக்கவும் அன்புநெறிப்பட்ட அறத்தைப் போதிக்கவும் உருவாக்கப்பட்ட இப்பாத்திரங்கள் 'கஸ்டல் பிளாபர்ட்' கூறுவது போல 'கடவுளைப்போல் உன்னத தன்மை கொண்டவை. அனைத்து ஆற்றலும் நிறைந்த மகோதயத் தன்மை கொண்டவை'.
புலவரின் புறப்பொருள் சார்ந்த குறுங்காவியங்களாகப் 'பசிப்பிணி மருத்துவன்', 'மானங்காத்த மறக்குடி வேந்தன்' முதலானவற்றைக் கூறலாம். பண்ணனின் ஈதலால் இசைபட வாழ்ந்த வரலாற்றைப் பாடும் 'பசிப்பிணி மருத்துவன்' 'இல்லை என்னும் சொல்லறியான்' முதல் 'தன்னிறைவு பெற்ற முல்லையூர்' ஈறாக எட்டுச்சிறுதலைப்புக்களில் பாடப்பெற்றது. 50 எண்சீர் விருத்தப்பாக்களாலான இக்குறுங் காவியத்துக்குப் 'பசிப்பிணி மருத்துவன்' என்ற தொடர் புறநானூற்றில் 173 ஆம் பாடலில் சோழ அரசன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவனால் கையாளப்பட்டது. இம்மன்னனால் பாடப்பெற்ற பெருவள்ளல் பண்ணனின் புகழைச் சிறப்பித்து பாடும் இக்குறுங்காவியம், 'சஞ்சீவி' வாரமலரில் தொடர்ந்து வந்து வாசகர் கவனத்தை ஈர்த்தது. பண்ணனின் ஈகை, வீரம், புகழ் என்பவற்றை உரைக்கும் இந்நூல் தமிழ்நூற்கல்வியின் அவசியத்தையும் எடுத்துரைக்கின்றது. குறிப்பாகப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 'பெண் கல்வியின் அவசியம்' என்னும் தலைப்பின் கீழ் இடம்பெறும்.
'கண்ணனைய கல்வியை நீர் பெறுதல் வேண்டும்என்னும் அடிகள் இக்கூற்றின் உண்மைத்தத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
கற்பதெல்லாம் ஏன் எனவும் அறிதல் வேண்டும்.
எண்ணரிய நூல் கற்றும் கற்ற கல்வி ...........
பெண்களும்தான் ஆண்களும்தான் கற்றல் வேண்டும்
பேசுமுயர் கல்விவழி நிற்றல் வேண்டும்'
புறம்பாடும் பிறிதோர் காவியமான 'மானம் காத்த மறக்குடி வேந்தன்' 21 விருத்தப்பாக்களாலும் ஒரு ஆசிரியப்பாவாலும் ஆனது. சேரசோழ பாண்டிய மன்னருடைய புகழைச் சிறப்பித்துப் பாடும் இக்குறுங்காவியம் முற்றுமுழுதும் பாடாண்திணைப் பாற்பட்டதேயாகும். அஞ்சுதவில்லாத மன்னனின் மதிநுட்பம், அறிவு, சொல் பெரியோரைத் துணைக்கோடல் யாசித்து வந்தவனுக்கு இல்லையென்னாது வழங்கும் கொடைத்திறன், செவ்வழி நடக்கும் செங்கோலாட்சி என்பவற்றை மாசறப் பேசும் இக்குறுங்காவியம் கற்றோரன்றி மற்றோரும் நவிலும் வகையில் பாடப்பட்டது.
செம்மையான யாப்பமைதியைக் கொண்டு புலவரால் பாடப்பட்ட இக்குறுங்காவியங்கள் புதுமைக்கண் கொண்டு எழுதப்படாவிடினும் சொல்லும் முறையால் புதுமை பயப்பன. எளியதமிழால் சீர், தளை தட்டாது புலவர் சொல்லும் முறைமை கற்றோர் மாத்திரமன்றி மற்றோரும் பொருளறிந்து சுவைக்கக் கூடியது. குறுங்காவியங்களை அறுசீர், எழுசீர், எண்சீர் எழில் நெடில் ஆகிய விருத்தப்பாக்களைக் கையாண்டு பாடும் புலவர் தேவையான இடங்களில் அகவற்பாவையும் கையாள்கிறார். நயமிகு, ஓசைநயமிக்க பாடல்களைக் கொண்டதாக விளங்கும் இக்குறுங்காவியங்கள் புலவரின் மதிநுட்பத்திற்கும் கவித்துவத்திற்கும் என்றென்றும் சான்றுபயக்குமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பழமரபில் புதுமைக்கவிஞராகத் தோன்றிய பார்வதிநாதசிவம் குறுங்காவியங்களை மாத்திரமன்றி நெடுங்காவியங்களையும் கற்றோரும் மற்றோரும் சுவைக்கும் வண்ணம் தொடர்நிலைச் செய்யுட்களாக எழுதினார். புலமைவாய்ந்த கல்வி வாணர்களைப் பாடுவதாகவும் பழையதொன்மங்களுக்குப் புத்துயிர்ப்பு அளிப்பதாகவும் அமைந்த இக்கவிதைகள் படிப்போரின் ஆர்வத்தை (உரசழைளவைல) தூண்டும் வகையில் சுவைமிக்கதாகவும் கவர்ச்சியுடையதாகவும் அமைந்துள்ளன. பாரதிதாசன் வாணிதாசன் கவிதைளைப் போல் கதைவடிவில் அமையும் 'செந்தமிழ்க்காவலனும் செழும்தமிழ்ப் பாவலனும்' 'சிலம்பின் செய்தி' காதலை அங்கு கண்டேன்' முதலான கவிதைகள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்னும் முறைமையிலுள்ளன.
இக்கவிதைகளுக்குள் மிக நீண்ட கவிதை 'செந்தமிழ்க் காவலனும் செழுந்தமிழ்ப் பாவலனும்' எனும் கவிதையாகும். புறப்பொருட் கூறுகளுள் விதந்து கூறப்படும் பாடாண்திணை வகையிலமைந்த இக் கவிதை பாரிமன்னனின் வீரம், கொடை, இன்னோரன்ன சிறப்புக்களுடன் அவன் கபிலருடன் கொண்ட உன்னத நட்பையும் எடுத்துரைக்கின்றன.
'வெற்றிதனை உறும்போதும் அறநெறியில் தவறான்
வீழ்ச்சியினை உறும்போதும் அறநெறியில் தவறான்
உற்றதொரு நெறிநிற்போர் வீழ்ந்தாலும் கூட
உடன் வந்தே அறக்கடவுள் தூக்கு மென்பதறிவான்'
எனப்பாரியின் நெறிதவறாத – அறம் குன்றாத ஆட்சியைப் பாடும் புலவர் 'பண்பு, கொடை இரண்டும் அவன் உடன் பிறந்தது' எனக் கூறி அவன் சான்றாண்மையை எடுத்துரைக்கின்றார்.
இவ்வண்ணம் புலவரின் தலைப்புக்கேற்றவகையில் 'பாரிமன்னன்' செந்தமிழ்க் காவலனாகவே காணப்படுகின்றான். அவ்வண்ணம் போலவே செந்தமிழ் பாவலரான கபிலர், பாரி மீது அன்பு கொண்ட புலவராகவும் பாரியின் பெண்களுக்கு கல்வி ஈந்தவராகவும் பாரி மன்னனின் இறப்புக்குப் பின் அப்புதல்வியருக்கு திருமணம் செய்து வைத்தவராகவும் புலவரால் சிறப்பிக்கப்படுகின்றார். ஈற்றில் மன்னன் மீது கொண்ட அன்பால் புலவர் தன் உணவையும் தண்ணீரையும் நீக்கி வடக்கிருந்து உயிர் நீக்கிறார். பாட்டாலே, பண்பாலே, ஏட்டாலே சிறந்து நிற்கும் கபிலருக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் இக்கவிதை பண்டைத் தமிழருடைய வாழ்வியலை உயிர்த்துடிப்புடன் காட்சிப்படுத்தும் புலவரின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றெனலாம்.
சிலப்பதிகாரத்திற்கு புதிய வடிவத்தைக் கொடுக்கும் 'சிலம்பின் செய்தி' பாத்திரங்களின் குறிப்புக்களின் ஊடாகத் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது. சிலம்பு எழுதப்பட்டதன் நோக்கத்தை
'கொடியோர் ஆட்சி நொடியினில் வீழல்என்னும் அடிகள் மிகத்துல்லியமாக விளக்கி நிற்கின்றன. இக்கவிதையில் புலவர் கோவலன், கண்ணகி, நெடுஞ்செழியன் என்னும் மூன்று பாத்திரங்களினூடகவே சிலம்பின் உள்ளகத் தன்மையை எடுத்துரைக்கின்றார். ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் தீட்டப்படுகின்றன. எடுத்துரைப்புப் பாத்திரங்களாகவே உருப்பெறும் இப் பாத்திரங்கள் எளிய சொற்களுக்கூடாகவே வாசகனுக்கு அறிமுகமாகின்றன.
ஊழ்வினை என்றும் உயிருடன் தொடரும்
பொறியினை வென்ற பொற்றொடியார் தம்
கற்பும் செல்வமும் எக்காலத்தும்
தேவராலும் தொழப்படும்'
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதனும் அவனுடைய வாழ்வியல் நெறியும் பாடப்பட வேண்டும். அவ்வாறு பாடப்படும் போதே அம்மனிதனின் உன்னத வாழ்வியலை அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் வள்ளுவனையும் அவன் குறளையும் அறிமுகப்படுத்தும் கவிதையே 'உலகமெனும் மலையினது உச்சியிலே ஒரு தீபம்' என்னும் கவிதையாகும். இக் கவிதையில் 'தௌ;ளுதமிழ் தழைத்தோங்கச் சீர்மேவ மனித குல உள்ளமெலாம் புனிதமுறக் குறள் நல்கினரே' என வள்ளுவனை அறிமுகப்படுத்தும் புலவர், வள்ளுவரை 'பெருமான்', 'சீரானர்', 'கவினார்' என்று கூறித்துதிக்கின்றார். அத்துடன் கவிவழி நற்குண நற்செய்கை, இல்லறவியல், கல்வியின் மாட்சி, பெண்ணின் பெருமை, அன்புடைமை, ஊழ், குடிமை, முடிமாட்சி போன்றவற்றையும் எடுத்துரைக்கின்றார். இக்கவிதை, குறள்வழி வள்ளுவரின் மாட்சியை எடுத்துரைக்கின்றது.
தமிழுக்குப் புதுநெறியை காட்டிய புலவர்களை நெடிய கவிதையில் பாடியதைப் போன்று நாவலர், பாவேந்தர் பாரதிதாசன், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, மறைமலை அடிகள், கவிஞர் கதிரேசர்பிள்ளை, அன்புள்ளம் கொண்ட பண்புடைப் பெருமகன் கே. சி. தங்கராஜா முதலான பல்துறை ஆளுமைகளையும் செந்தமிழ்க் கவிதைகளாக வடித்தார். புலவர் பண்டைத் தமிழறிஞர்கள் மீது கொண்ட அதீத அன்பும் அக்கறையும் இக்கவிதைகளி;ல் வெளிப்படுத்தப்படுகின்றன. எவ்வித விதப்பமுமற்று உள்ளதை உள்ளவாறு சொல்லுமிக்கவிதைகள் பெரும்பாலும் தன்மை நவிற்சி அணிக்கூடாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. 15.07.1984 இல் 'ஈழநாடு' வாரமலரில் வெளிவந்த 'தனித்தமிழ் வளர்த்த சான்றோன்' என்னும் கவிதை இதற்குத்தக்க சான்று பகர்கின்றது.
'மறைமலை என்ற மாண்புசேர் அறிஞன்இக் கவிதையில் மறைமலை அடிகளின் விம்பம் எவ்வித முரணுமற்று நிதர்சனமாகப் பதிவு செய்யப்படுகின்றது. மக்கள் மத்தியில் என்றுமே அமரத்துவம் அடையாத புலமைச் சான்றோர்களைப் பாடிய இக்கவிதைகளும் நவீன யுகத்திலும் அமராத சிருஷ்டியாகவே தன்னை முன்னிறுத்தும்.
துறைதொறும் தமிழினைத் துலங்கிடச் செய்தனன்
வடமொழி இன்றியும் வண்டமிழ்ப்பாவை
திடமுறநிற்பாள் என்னுமோர் சிறப்பை
நடைமுறைப் படுத்தினான்.......'
மொழியுணர்வின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து புலவர் பாடிய பாக்கள் தாய்மொழியாகிய தமிழைத் தழைக்கச் செய்ய அடிகோலியது. இவரின் வாழ்கதமிழ், தமிழ்ப்பாவை, உலக முதன்மொழி என்னும் கவிதைகள் தமிழின் மாட்சியைப் பாடுகின்றன. தமிழ்ப்பாவை எனும் கவிதையில் தமிழைப் பெண்ணாகக் கருதும் கவிஞர் அவளைச் 'செழுந்தேனே' , 'அகமலரில் திகழும் தேனே', 'நெஞ்சில் நடந்தின்பம் உதவும் தேனே', 'புவி போற்றும் விழுப்பொருளே' என்றும் போற்றுகிறார். அதே சமயம் 'வாழ்க தமிழ்க் கவிதையில் கனிமொழி, தனிமொழி, கவின்மொழி' எனப்போற்றப்படும் தமிழ், அகத்தியனால் வளர்த்தெடுக்கப்பட்ட செய்தியையும் எடுத்துரைக்கின்றது. 'வாழ்க' என்னும் வியங்கோளுக்கூடாகக் கட்டுறும் இக் கவிதை கட்டழகு குறையாத தனித்துவ மொழியாகத் தமிழை அடையாளப்படுத்துகின்றது.
மனமெனும் அரூபத்தில் கட்டுறும் 'காதல்', மென்னுணுணர்வுத் தளத்தில் புலவரால் பதிவுசெய்யப்படுகின்றது. 'எழுத்துக்கு மறுநாள்', 'ஈருயிர்கள் இணைந்தன', 'அஞ்சுகம் துணிந்துவிட்டாள்', 'வாராரோ அன்பர்', 'காதல் நெஞ்சத்தைக் கவர்ந்த காட்சிகள்', 'கனவு நனவாமோ', 'தலைவன் தலைவி', 'நாணமே தடை', 'குறும்பாய் நகைத்தான் அவன் வாழி', 'பந்தாடும் பாவை', 'நீராடல்', 'தேன்சிந்தும் செம்மலர்கள்', 'காதலை அங்கு கண்டேன்' முதலான கவிதைகள் அகவுணர்வுத் தளத்திலேயே இயங்குகின்றன. புலவரின் அகம் சார் பாடல்கள் பண்டைய இலக்கியத் தன்மைகளை உள்வாங்கிக் கொண்டனவாகவும் அதேசமயம் இயற்பியல் வாழ்வைப் பிரதிபலிப்பனவாகவும் அமைகின்றன. 'ஈருயிர்கள் இணைந்தன' (ஈழநாடு 16.11.1986) என்னும் கவிதை தலைவன் தலைவி கூற்றாக நாடகப் பாங்கில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுடன் பெயர் சுட்டாத காதற்பாவாகவே அமைகின்றது.
'உன்னுள்ளத்தை நான் புரிந்தேன் என்னுயிரை ஏற்பாய்எனத் தலைவி கூற்றாக வரும் வரிகள் காதலை மகத்துவமான புனித சிருஷ்டியாகவே பதிவு செய்கின்றன. அதே சமயம் நடப்பியல் வாழ்வை 'காதல் நெஞ்சைக் கவர்ந்த காட்சிகள்' என்னும் கவிதைக்கூடாக பதிவு செய்கிறார். இப்பாடலில் காலை நிதம் துயிலெழுப்பும் அன்புக்குரியவளின் பணிவிடைகளால் மனம்நெகிழ்ந்து தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் கணவனின் மனையாற்றுகை பிறழ்வின்றித் துல்லியமாக வெளிப்படுத்தப்படுகின்றது.
உன்னுயிரை ஈடாக என்தனுக்கே ஈவாய்
இன்னும் பல்பிறவிகள் நாம் எடுத்தல் செய்வோம்
எடுக்கும் பல்பிறவியிலும் ஒன்றாக வாழ்வோம்'
கலித்தொகைப் பாடல்களை நினைவூட்டிச்செல்லும் 'கனவு நனவாமோ' 'குறும்பாய் நகைத்தான் அவன் வாழி' முதலான கவிதைகளும் குற்றாலக் குறவஞ்சிப் பாடலடிகளை நினைவூட்டிச் செல்லும் 'பந்தாடும் பாவை' எனும் கவிதையும் புலவரின் பண்டைத்தமிழிலக்கியத்திலிருந்த பரிசயத்தைப் புடம் போட்டுக் காட்டுகின்றன. யதார்த்தப் புனைவு, அதீத புனைவு என்னும் இருதளங்களில் இயங்கும் இக் கவிதைகள் புறப்பொருண்மைக் கூடாக அகவுணர்வை வெளிப்படுத்தி நிற்பவை.
ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றிலே குழந்தைப் பாடல்களுக்குத் தனித்துவமானதோர் இடமுண்டு. நல்ல கற்பனையும் சிறந்த உணர்ச்சிகளும் உயர்ந்த நோக்கங்களுமுடைய குழந்தைப் பாடல்கள் ஓசை நயமிக்கதாகவும் குழந்தைகளின் மனதில் பதியத்தக்க வகையிலும் பாடப்படவேண்டும். எளிமை, இனிமை, தெளிவு கொண்ட இவ்வகையான குழந்தைப் பாடல்களைப் பார்வதிநாதசிவம் அவர்களும் பாடியுள்ளார்.
1974 இல் வெளிவந்த 'மழலை மலர்கள்' தொகுப்பில் புலவர் பாடல் இடம்பெற்றதைப் போன்று 2008 இல் வெளிவந்த 'மகாஜனன் குழந்தைக் கவிதைகள்' என்னும் நூலிலும் புலவரின் குழந்தைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம்பெறும் புலவர் அவர்களின் 'அழகிய முயல்', 'அம்புலிமாமா', 'பள்ளிக்கூடம் செல்கிறோம்' என்னும் பாடல்கள் வாய்விட்டுப் பாடக்கூடிய இனிய ஓசைநயமிக்கனவாக அமைந்துள்ளன. இம்மூன்று பாடல்களும் குழந்தைகளுக்குப் பரிசயமான இயற்கைச் சுற்றுச்சூழலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகவே காணப்படுகின்றன. சிறுவர் பாடல்கள் பெரும்மாலும் பதினாறு, இருபது அடிகளுக்குள்ளேயே பாடப்பட்டுள்ளன. குழந்தைக்குரிய மனோநிலையில் பாடப்பட்ட இப்பாடல்கள் குழந்தை இயற்கையை ரசிக்கும் என்பதை மட்டும் உணர்த்தாது, குழந்தைகள் விலங்குகளை நேசிக்கும் என்பதையும் உணர்த்தி நிற்கின்றன. இதற்குத் தக்கசான்றாக 'அழகிய முயல்' என்னும் கவிதை விளங்குகின்றது. முயலைப் பிடிக்கவரும் வேட்டைக் காரனைக் கண்டு அஞ்சி மிரட்சியுற்ற குழந்தை உடனே சுதாகரித்துக் கொண்டு தன் தமையனிடம் 'ஓடிச் சென்று முயலை நீ உடனே கலைத்து விடுவாயே கேடில்லாத முயலுக்கே உடனே உதவி செய்யண்ணா' என்னும் அடிகள் குழந்தை ஈர நெஞ்சை உள்ளங்கை நெல்லிக் கனியாய் எடுத்துரைக்கிறன. இவை மாத்திரமன்றி புலவரின் ஏனைய மழலைக் கவிதைகளை 'ஈழநாடு சிறுவர் பூங்கா' என்னும் பகுதியிலும் காணலாம்.
இன்றைய நடைமுறை யதார்த்த இயங்கியலில் 'கலைகலைக்காக' என்னும் கோட்பாடு மறுதலிக்கப்படும் அதேவேளை கலை வாழ்க்கைக்காக என்னும் கொள்கையே வலுவுடையதாகக் காணப்படுகிறது. சமூகத்தோடு தன்னை இணைத்து அதனோடு இயைந்து ஒழுகும் இலக்கிய கர்த்தா சமூகத்தின் அகப்புறப் பொருண்மையில் நிகழும் மாற்றங்களை படைப்பில் கொண்டு வருகிறான். அவ்வகையில் புலவரின் 'பணம் எனும் பாவை' 'எங்கே அவர்' 'மின்சார வெட்டும் சம்சாரசோகமும்' 'பாணும் பாவையும்' 'மாவைத் தேடி' 'அபூர்வ வைத்தியர்' வாடகை வீட்டு வாழ்வு' 'குளிர்' 'தெய்வம் மகிழ்ந்தது' 'இல்லக விளக்கு' 'மதுவினில் ஒருவன்' முதலான இன்ன பிறகவிதைகளும் சமூக வாழ்வியலைப் பேசுகின்றன. தான் வாழும் சமூகத்தை எவ்வித சிதைவுமின்றி நேர்த்தியாகக் காட்சிப்படுத்தும் இக்கவிதைகள் காலத்தின் குரல்களாக ஒலிக்கின்றன. யாழ்ப்பாண மாந்தரின் நடைமுறை வாழ்வியலையும் அதன் சீர்கேடுகளையும் பாடும் இக் கவிதைகள் எளிமைத்தன்மை கொண்டவை. இயற்பியலினூடாக மனித வாழ்வை அவாவி நிற்பவை. 'யாப்பு அமைதிகளைக் கொண்டு உணர்வு பூர்வமாய் எளிமைத்தன்மையுடன் கவிதை பாடும் புலவர்' எனப் பேராசிரியர் கைலாசபதியால் சிறப்பிக்கப்படும் இவர் மரபாலும் சூழலாலும் பயிற்சியாலும் தமிழ்ப் புலமை கைவரப் பெற்றவர். சமூக நோக்குடைய இலக்கிய நெஞ்சின் உடைமையாளன்' எனப் பேராசிரியர் நா. சுப்பிரமணியனால் விதந்துரைக்கப்படுபவர். காலத்தின் தேவை கருதி எளிமைத் தமிழால் நவீன கவிதைக்கும் புதுப்பரிமாணம் வழங்கிய பார்வதிநாதசிவம் இன்றும் என்றும் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்படவேண்டியவர் ஆவார்.
ஈழத்து இலக்கிய உலகில் கவிஞராக நன்கறியப்பட்ட பார்வதிநாதசிவம், 1989 களுக்குப் பின் 'முரசொலி', 'சஞ்சீவி' 'உதயன்', 'தினக்குரல்' முதலான பத்திரிகைகளுக்கூடாக சிறந்த கட்டுரையாசிரியராகவும் அறியப்படுபவர். மரபு வழித் தமிழிலக்கியங்களில் இருந்த ஆழ்ந்த புலமைப்பரிசியத்தை வெளிப்படுத்தும் இவர் கட்டுரைகள் பேராசிரியர் விசாகரூபன் குறிப்பிடுவது போல் 'இன்றைய இளந்தலைமுறையினரும் கவனத்தைக் குவித்துப்படிக்கும் படி மிகவும் எளிமைத்தன்மை கொண்டவை. 'பண்டைத்தமிழ் இலக்கியங்களையும் அதன் பாவலர்களையும் எளிமையோடும் யாவரும் இன்புறும் விதத்தில் ரசனையோடும் வெளிப்படுத்திய புலவர் தமிழ்மொழியின் முதன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தி உள்ளார். பார்வதிநாதசிவம் ஐம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள போதிலும் அவரின் இருபத்திரண்டு கட்டுரைகளே தொகுக்கப்பட்டு 'தழிழ்ச்செல்வம்' என்னும் நூல்வடிவில் வெளிவந்துள்ளன. சங்கத்தமிழையும் வள்ளுவனாரின் குறட்பாக்களின் இனிய நயத்தையும் எடுத்துரைக்கும் இக்கட்டுரைத் தொகுப்பு, தமிழ்ப்பண்பாட்டையும் அப் பண்பாட்டினூடாக விளையும் காதiலையும் வீரத்தையும் விளக்கி நிற்கிறது. தமிழினப்பற்றையும் தமிழ் மொழிப்பற்றையும் விளக்கி நிற்கும் இந்நூல் கற்போருக்கு மிக்க பயனையுடையது ஆகும்.
கவிதையின் இருப்பு அதன் இயங்கியல் தொடர்பாக ஆராயும் 'தமிழ்க்கவிதையும் காலமாற்றமும்', 'இருபதாம் நூற்றாண்டுக் கவிதைநடை இதுவெனக் காட்டிய மகாகவி பாரதி' 'தனிப்பாடல் திரட்டில் இனிப்பான பாடல்கள்' முதலான கட்டுரைகள் கவிதை வெளிப்பாட்டு முறைமையை விளக்கி நிற்கின்றன. தமிழ்க்கவிதை காலமாற்றங்களை உள்வாங்கித் தன்னைப் புதுப்பொலிவுடன் வடிவமைத்துக் கொண்டதை எடுத்துரைக்கும் 'தமிழ்க்கவிதையும் காலமாற்றமும்' என்னும் கட்டுரை தமிழ் யாப்பின் படிமுறையை புதுக் கவிதையுடன் தொடர்புபடுத்தி ஆராய்கின்றது. இதனைப் போன்று காலத்தின் தேவைக்கேற்ப கவிதை நடையை பொருத்தமாகவும் நுட்பமாகவும் மாற்றியமைத்த பாரதியாரின் முழுப்பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் 'இருபதாம் நூற்றாண்டுக் கவிதைநடை இது வெனக் காட்டிய பாரதி' என்னும் கட்டுரை யாப்பின் வழி பாரதியை அணுகுகிறது. இலக்கண நுட்பம் நிறைந்த வெண்;பாவை எளிமையாகப் பாரதி கையாண்ட தன்மையை விளக்கும் புலவரின் மதிநுட்பமும் இங்கு விதந்து போற்றத்தக்கது.
யாவரும் விரும்பி வாசிக்கும் வண்ணம் எளிய உரையைக் கையாளும் புலவர் நூலை நுவல்லோனுக்கு இலக்கிய ஈர்ப்பை ஊட்டுவதற்காக இரசனைக்குரிய காட்சிகளை கட்டுரைக்குள் உள்வாங்கி வெளிப்படுத்துகிறார். கட்டுரைக்குள் நுழைபவனுக்கு மேலதிக விளக்கமாக அமையும் இப்பகுதிகள் கட்டுரையை நிகழ்வறிந்து பொருளறிந்து என்றுமே மறக்காவண்ணம் நினைவுபடுத்திக்கொள்ள உதவும். 'தமிழறியாக் காவலரும் தன்மானப்பாவலரும்', 'ஈத்துவக்கும் இன்பம்', 'இன்பத்துள் இன்பம் இலக்கிய இன்பம்', முதலான இன்ன பிற கட்டுரைகளும் இவ் வகையிலமைந்துள்ளவையே ஆகும் ஆசிரியத்துறையில் குறிப்பாகத் தமிழ்த்துறையில் வாண்மையை விருத்தி செய்து கொள்ள இக்கட்டுரைகள் உதவும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
திருவள்ளுவர், இளங்கோ, பெருஞ்சித்திரனார், ஒளவையார், கபிலர், பாரதி, பாரதிதாசன், முதலான கவிஞர்கள் பலரிடம் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் புலவர். ஆகையால் இப்பாவலர்களே அன்னாருடைய கவிதையில் ஆட்சிமை பெற்றது போல புலவருடைய கட்டுரைகளிலும் முக்கிய வகிபங்கினை பெற்றுள்ளார்கள். 'திருவள்ளுவர் காட்டும் காதல் வாழ்வு' என்னும் கட்டுரை பண்டைத்தமிழர் வாழ்வியல் நெறியை நடைமுறைவாழ்வியலோடு இணைத்துப் பேசுகிறது.
கணவன், மனைவி கருத்தொருமித்து வாழ்தலை 'இன்சொல்', 'அன்புடைமை' க்கூடாக ஆராயும் புலவர் தன் கருத்துக்கு உறுதிபயக்கும் வகையில் ஒளவையார், கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை முதலானோரின் பாடல்களை ஆதாரம் காட்டி விளக்குகிறார். குறளின் விளக்கத்துக்காகப் பின்னிணைப்பாக உபகதைகளும் கட்டுரைகளும் இணைக்கப்படுகின்றன. இம்முறை பாரம்பரிய கல்விமுறைக்கூடாக புலவர் பெற்றுக் கொண்ட அநுபவங்களின் விளைவே எனலாம். 'குறுந்தொகைச் செல்வம்' என்னும் நூலில் சாமி சிதம்பரனாரும் இவ்வழியிலேயே உரையெழுதிச் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
'பாத்திரப்படைப்பில் இளங்கோவின் சாதனை' 'இளங்கோவின் கவிச் சிறப்பு', 'இளங்கோவும் சேக்ஸ்பியரும் பாத்திரப்படைப்பில் கையாண்ட இரு வேறுபட்ட உத்திமுறைகள்' 'காப்பியம் தரும் சிலம்பும் கதையில் வரும் நெக்லெஸூம்' என்னும் கட்டுரைகள் இளங்கோ அடிகளாரின் கவித்திறனை முழுமையாக ஆராயும் கட்டுரைகளாகும். நிறைந்த அறிவும் பல்துறை ஆளுமையும் கொண்ட இளங்கோ அடிகளாரைச் சேக்ஸ்பியருடன் ஒப்பிட்டு ஆய்வது புலவரின் ஆங்கில அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
பாரதியாரைப் போலவே பாரதிதாசன் மீதும் புலவர் அன்பு கொண்டவர். பாரதிதாசனோடு நெருங்கிப் பழகிப் பழகி நுண்ணறிவை மேலும் புடமிட்டுக் கொண்டவர். பாரதிக்கு தாசனெனத் தமை உரைத்துக்கொண்டவர். பார்வதிநாதசிவத்தால் போற்றப்பட்ட பாவேந்தர் 'குருவைப் போற்றிய புதுமைப்பாவலன், 'காதலுக்கு விளக்கம் கூறிய கவின் மிகு இலக்கியங்கள்' எனப் புலவரின் பல்வேறு கட்டுரைகளிலும் சிறப்பிக்கப்படுகின்றார். புலமைசார் அறிவுடையோர் நூல்களைப் போற்றிப் படித்தின்புறுவதோடு நில்லாது அதனை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தும் புலவரின் கட்டுரைகள் காலத்தால் அழியாத சஞ்சீவியாய் என்றும் நிலைத்து நிற்பவை.
தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு முக்கியத்தவம் கொடுத்துப் புலவரால் எழுதப்படுகின்ற கட்டுரைகள் எளிமைத் தன்மை கொண்டவை. அதேசமயம் பன்முகத் தன்மை கொண்டவை. நீண்ட தொடர்களாக அமையாது சிறுசிறு வாக்கியங்களுக்கூடாக வெளிப்படும் புலவருடைய கட்டுரைகளில் ஓரிரு ஆங்கிலச் சொற்களையே அரிதாகக் காணமுடிகிறது. பெயரளவில் வடமொழிச்சொற்களைக் கலந்து கட்டரைகளைப்புலவர் எழுதினாலும் அச்சொற்கள் வாசகனையே கட்டுரையையோ எள்ளளவும் பாதிக்கவில்லை. எடுத்த பொருளைக் குறித்த நோக்கில் சொல் நேர்த்தியுடன் எளிமையாகப் புலப்படுத்த புலவருக்குப் பத்திரிகையில் பணிசெய்த பழுத்த அநுபவம் காரணமாயிற்று எனலாம். இதனைப் பத்திரிகையாசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கிய பாரதி, பாரதிதாசன், திரு.வி.க, பெரியார் முதலானோரிடமும் காணலாம்.
ஆழ்ந்த சிந்தனையும் அகன்ற கல்வியும் பன்மொழிப்புலமையும் கொண்ட பார்வதி நாத சிவம், பண்டிதர் வ.நடராஜா கூறுவதுபோல் 'கவிதைகளில் தனி முத்திரை பதித்தவர். கட்டுரைகளில் தனக்கெனத் தனித்துவத்தைப் பேணியவர். குலவித்தை கல்லாமற் பாகற்படும் என்பதற்கமைய அவரிடம் தமிழ் அடிபணிந்து சேவகம் புரிந்தது. புகழும் வேண்டாப் புகழாளராய் விளங்கிய பார்வதி நாத சிவம் தன்னலமும் தன்குடும்பத்தினலமும் பேணாது வாழ்ந்தார். மன்னலமே என்றும் மதித்தொழுகும் நன்னலம் என வாழ்ந்த இப்பெரியார் உடல் மூப்பு தள்ளாமையிலும் தமிழ்ப்பணி செய்து வாழ்பவர். அவ்வகையில் அவர் முன்னோர் செய்த தமிழ்ப்பணி அரிதிலும் அரிதென நான்காவது தலைமுறையான அவர் புதல்வர் மகாலிங்கசிவம், இளங்கோ, பாலமுரளி முதலானோராலும் முன்னெடுக்கப்படுகின்றது. 1987.08.01,1987.08.07 ஈழநாடு சிறுவர் மஞ்சரிக்கூடாக முறையே அறியப்பட்ட மகாலிங்கசிவம் (வண்ணமலர்கள் நாம் ஆவோம்-கவிதை) பாலமுரளி (உழவுத்தொழில்-கவிதை)ஆகியோரின் இலக்கியப்பணிகள் மகாஜனன் குழந்தைக் கவிதைகள், மகாஜனன் கவிதைகள் என இற்றைவரை தொடர்ந்து செல்கின்றன.
தமிழுக்கென்றே தம்மை இறைவன் படைத்தனன் என உளங் கூர்ந்துரைத்து அப்பணிக்கே தம்மை முழுதுற ஒப்படைத்த உரவோர் வையத்தில் என்றும் உயர்வர். இனிது வாழ்ந்து என்றென்றும் இருப்பர்.
No comments:
Post a Comment