தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களையும் சங்க இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவர் நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள். அவர் ஒரு சிறந்த பேச்சாளரும் ஆவார்.
தமிழ் நாவலர்களை விரும்பி வாசிக்கும் வாசகர்கள் அவருடைய குறிஞ்சி மலர் என்ற நாவலையும் பொன்விலங்கு என்ற நாவலையும் வாசிக்கத் தவறி இருக்கமாட்டார்கள்.
கல்கி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த போது பார்த்தசாரதி அவர்கள் கல்கியில் இந்த இரட்டைத் தொடர் நாவல்களை எழுதினார்.
இந்த இரண்டு நாவல்களும் கல்கி வார இதழில் வெளிவந்த போது கல்கி வாசகர் தொகை பெருகியது. கல்கி விற்பனை அதிகரித்தது.
இந்த இரண்டு நாவல்களையும் விட இன்னும் பல நாவல்களையும் அவர் எழுதினார்.
நாவலுடன் சிறுகதை, நாடகம், கவிதை, இலக்கியக் கட்டுரை எனப் பலவும் எழுதினார். தமது எழுத்துக்களால் பிரபலம் பெற்றிருந்த அவர் கொழும்பில் ஓர் இலக்கிய விழாவுக்காக வந்திருந்தார். நான் அப்பொழுது வெள்ளவத்தையில் தங்கியிருந்தேன்.
அவர் பம்பலப்பிட்டி கிறீன்லன்ஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவருடைய குறிஞ்சி மலர், பொன்விலங்கு முதலிய நாவல்களையும் அவருடைய சிறுகதைகள் இலக்கியக் கட்டுரைகளையும் படித்திருந்த நான் அவரைச் சந்திக்க கிளின்லன்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றேன்.
அவருடைய கம்பீரமான தோற்றம் பார்ப்போருக்குச் சேர, சோழ, பாண்டியரை நினைவுபடுத்தும்.
அவருடைய வாசகன் என்று என்னை அறிமுகம் செய்ததும் பெருமகிழ்வுடன் வரவேற்றார். தமது வாசகர்களைச் சந்திப்பதில் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்தேன்.
இலக்கியம் கூறும் கருத்து, கற்பனை, மொழி நடை, ஆக்க இலக்கியங்களுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்கள். இவை அனைத்தும் அவருடைய ஆக்கங்களிற் சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றன என்று கூறினேன். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
பொன்விலங்கு நாவலில் எனக்குப் பிடித்த அம்சங்களைக் கூறியதுடன் பொன்விலங்கு கதாநாயகன் சத்தியமூர்த்தி பற்றியும் கூறினேன்.
சத்தியமூர்த்தி என்ற கதாநாயகனை நாவலில் படித்தறிந்த பலர் சத்தியமூர்த்தி போல நெறியுடன் வாழ்வதையும் நெறி பிழைத்தோரின் சிறுமைகண்டு பொங்குவதையும் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர் சத்தியமூர்த்தி ஒரு இலட்சியப் படைப்பு என்றும் இலட்சிய வாழ்வு வாழ நினைக்கும் இளைஞர்களுக்கு அந்தப் பாத்திரம் மேலும் ஊக்கம் கொடுக்கும் என்றும் கூறினார்.
உண்மையையே ஒரு சமயமாக வழிபடுவதற்குக் கற்றுக் கொள்ளாத படிப்பினால் நாட்டுக்குப் பயனில்லை என்றார்.
தினக்குரல், 10.5.2009
No comments:
Post a Comment