உரையாசிரியர் ம.க வேற்பிள்ளை


ம.பா.மகாலிங்கசிவம்

ஈழத்திலே தோன்றித் தமிழ் வளர்த்த அறிஞர்களுள் முக்கியமான ஒருவர் உரையாசிரியர் என்றும் பிள்ளைப்புலவர் என்றும் போற்றப்பட்ட ம.க.வேற்பிள்ளை. இவர் 1848ம் ஆண்டு தமிழுக்கு தைமாதம் 08ம் திகதி மட்டுவிலில் பிறந்தார். இவரது தந்தையார் கணபதிப்பிள்ளை உடையார்.

ம.க.வேற்பிள்ளை சிறுவயதிலேயே தாய் வழிஉறவினரான சண்முகம் சட்டம்பியாரிடம் கல்வி கற்றார். பின்னர் நல்லூர்க் கார்த்திகேய ஆசிரியரிடமும் ஆறுமுகநாவலரிடமும் மரபு வழி கல்வியைப் பெற்றார் நாவலர் சென்னை சென்ற போது அவருடன் அங்கும் சென்று கல்வி தொடர்;ந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நாவலரின் மருகரான வித்துவசிரோமணி பொன்னம்பலம்  பிள்ளையிடமும் கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இவர் திருவாதவூரடிகள் புராணம், புலியூர்ந்தாதி, அபிராமிஅந்தாதி என்பவற்றுக்கு உரையெழுதியுள்ளார். அதுமட்டுமன்றி கெவுளி நூல் விளக்க உரையும் இவரால் எழுதப்பட்டதாகும்.

சிறந்த கவிஞராகவும் விளங்கிய இவர் ஈழமண்டல சதகம், புலோலி வயிரவக் கடவுள் தோத்திரம், புலோலி பர்வத பத்தினி அம்மை தோத்திரம், ஆருயிர்க்கண்மணிமாலை என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.  வேதாரணிய புராணம், சிதம்பர சிவகாமிஅம்மை சதகம் என்னும் நூல்களைப் பதிப்பித்து பதிப்பாசிரியராகவும் விளங்கினார். இவரது உரைகளிலே திருவாதவூரடிகள் புராண விருத்தியுரை அனைவராலும் போற்றப்படுவதாகும். இவரது உரையை வாசித்து இவரின் இலக்கிய வன்மையையும், சைவ சித்தாந்த அறிவையும் தருக்கத்திறனையும் உணர்ந்த வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை உரையாசிரியர் என்னுஞ் சிறப்புப் பட்டத்தை இவருக்கு அளித்தார். இன்றும் ஆலயங்களில் திருவாதவூரடிகள் புராணத்திற்கு இவரது உரையையே படிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் இயற்றிய செய்யுள் நூல்களில் முக்கியமானது ஈழ மண்டல சதகம்ஆகும். ஒரே பொருள் பற்றி நூறு பாடல்களிற் கூறும் இலக்கிய வடிவம் சதகம் ஆகும். ம.க.வேற்பிள்ளை தமிழகத்தில் இருந்தவேளையில் ஈழத்தின் பெருமைகைளைத் தமிழகத்தவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நூல் ஒன்றை இயற்றுமாறு அங்கிருந்த ஈழத்தவர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்காகவே இதிகாசபுராணக்கதைகளையும் ஈழத்து வரலாற்றுச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு ஈழத்தின் பெருமைபேசும் ஈழமண்டல சதகத்தை இவர் இயற்றினார். இந்நூல்  1923ம் ஆண்டு தமிழகத்திலேயே அரங்கேற்றப்பட்டது. அப்போது சிதம்பர வையாகரணிகர, முத்தையப் பட்டாரகர் முதலிய பேரறிஞர்களால் இவருக்குப் பிள்ளைப் புலவர் என்னும் கௌவரவப்பட்டம் வழங்கப்பட்டது.

ம.க.வேற்பிள்ளை, சைவப்பெரியார் சிவபாதசுந்தரனாரின் சகோதரியாகிய மகேஸ்வரிதேவியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். பிற்காலத்தில் சிறப்புடன் விளங்கிய பண்டிதர் ம.வே திருஞானசம்பந்தப் பிள்ளை, சட்டத்தரணி மாணிக்கவாசகர், குருகவி ம.வே.மகாலிங்கசிவம், ஆங்கில ஆசிரியர்களான கந்தசாமி, நடராசா ஆகியோரே ஐவருமாவார். ம.க.வேற்பிள்ளை தொடக்கி வைத்த கவிதைப் பரம்பரை அவரது மகன் குருகவி ம.வே.மகாலிங்கசிவம், அவரது மகன் புலவர் ம.பார்வதிநாதசிவம், அவரது மகன் ம.பா.மகாலிங்கசிவம் என நான்காவது பரம்பரையாகவும் தொடர்வது குறிப்பிடத்தக்கதாகும்.


மட்டுவிலில் இன்று சந்திர மௌலீச வித்தியாசாலை என்ற பெயரில் வழங்கும் பாடசாலையை உருவாக்கிய ஸ்தாபகர்; ம.க.வேற்பிள்ளையே. இவரது காலத்திற் காவியப் பாடசாலையாகவும் இப்பாடசாலை விளங்கியது.

நாவலரிடம் கல்வி கற்ற சிறப்பினால் ம.க.வேயின் பேச்சு எழுத்து எல்லாமே நாவலருடையது போன்று அமைந்திருந்தன. நாவலர் மரபைப் பின் பற்றிப் பிரசங்கம் செய்வதிலும் இவர் ஈடுபட்டார். சிதம்பரம் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை அதிபர் அப்பாடசாலைக்கு இவரது சேவையை விரும்பி அழைத்தார். அங்கு சென்ற ம.க.வேற்பிள்ளை சிறிது காலம் உதவி ஆசிரியராக இருந்த பின் ஓய்வு பெறும் வரை தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.




ஈழத்தில் இவரிடம் கற்ற மாணவர்களில் வித்துவான் ந.சுப்பையாபிள்ளை, பண்டிதர் ஏகாம்பரநாதர், வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர் ஆகியோர் முக்கியமானர்கள். தமிழக மாணவர்களில் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் முதன்மையானவர். ம.க.வேற்பிள்ளை அவர்கள் 17.02.1930 ஆம் திகதி சிதம்பரத்திலே காலமானார்.


நன்றி இலக்கியப்பூக்கள்
தொகுப்பாசிரியர் முல்லை அமுதன்
காற்றுவெளி (லண்டன்) வெளியீடு
2008

No comments:

Post a Comment