குருகவி ம.வே.மகாலிங்கசிவம்



ம.பா.மகாலிங்கசிவம்

தமது பன்னிரண்டாவது வயதிலேயே பழனிப் பதிகம் பாடிக் குருகவி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டதுடன், பரீட்சை எடாத பண்டிதர் என்றும் போற்றப்படுபவர் ம.வே.மகாலிங்கசிவம். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையின் மூன்றாவது மகனான இவர், 1891ம் ஆண்டு மட்டுவிலிற் பிறந்தார். இவரது தாயார் மகேஸ்வரி, புலோலியூர் வ.குமாரசுவாமிப் புலவரின் உறவினர் என்பதும் சைவப்பெரியார் சு.சிபாதசுந்தரனாரின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலே தந்தையிடம் இலக்கிய, இலக்கணங்களை ஐயந்திரிபற மகாலிங்கசிவம் கற்றார். சிதம்பரம் நாவலர் பாடசாலைக்குத் தலைமை ஆசிரியராகத் தந்தையார் சென்ற பின்னர் தமது உறவுப் பெண்கள் இருவரை ஏற்கனவே தமது கற்பித்தல் மூலம் மதுரைத்தமிழ்ப் பண்டிதைகளாக்கிய பேர்த்தியான பார்வதிப் பாட்டியிடம் கல்வி கற்றார். ஆத்திசூடி முதற் பழமலை அந்தாதி வரை பாட்டியிடம் பயின்றார்.

கற்றல் நிறைவு பெற்றதும் மட்டுவிலேயே தந்தையார் ஆரம்பித்த காவியப் பாடசாலையில், இலக்கிய இலக்கணங்களைத் திறம்படக் கற்பித்து வந்தார். இவரிடம் இங்கு கல்வி கற்றவர்களில் முக்கியமான இருவர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும், புலவர் மணி ஆ.பெரியதம்பிப்பிள்ளையும் ஆவர்.

பின்னர் பண்டிதமணியை நாவலர் காவிய பாடசாலைக்குக் கல்வி கற்க வழிகாட்டியவரும் மாகலிங்கசிவமே. இதே போலப் புலவர்மணி, மண்டூரில் இருந்து வந்து மட்டுவிலிலேயே தமது வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்கவும், பின்னர் நாவலர் காவியப் பாடசாலையிலே கற்கவும் வழிகாட்டியவரும் இவரே.

மகாலிங்கசிவத்தின் உபசாரம் பற்றி, 'மட்டுவில் உபசாரத்தில் மயங்கிவிட்டேன. மகாலிங்கசிவத்தின் இனிய தமிழ் விருந்தில் மெய்ம்மறந்து போனேன். வானரவீரர் மதுவனத்திற் பெற்ற அநுபவம் போன்ற அநுபவம் எனக்கும் கிடைத்தது அது தேன் சுவை. இது தமிழ்த் தேன் சுவை' எனத் தமது உள்ளதும்நல்லதும் என்னும் நூலிற் புலவர் மணி கூறுகிறார்.

நகைச்சுவையாகப் பேசுவதிலே தன்னிகரற்றவராகத் திகழ்ந்த மகாலிங்கசிவம், கம்பராமாயணம், திருக்குறள் என்பன பற்றி ஆய்வு பூர்வமாகப் பேசுவதிலும் வல்லவராக இருந்தார். 1926ஆம் ஆண்டு சேர்.பொன் இராமநாதன் மட்டுவில் சந்தரமௌலீச வித்தியாலயத்திற் பரிசளிப்பு விழாவிற்கு வந்திருந்தார். இவ்வேளை இவர் பாடிய வரவேற்புப் பாவும் பேசிய நகைச்சுவைப் பேச்சும் இராமநாதன் அவர்களைக் கவர்ந்தமையால் இவருக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் வாய்புக் கிடைத்து. பின்னர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும் 20 வருடங்கள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அடுத்து, இவரது கவிதைப் பணியை நோக்கினால் நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரைப் போலச் சிறுவதியில் இருந்தே கவிதை பாடும் ஆற்றலுடையவராக இவரும் விளங்கினார். கவிதை எழுதுவதற்கென ஒரு நேரம் இன்றி, கேட்டவுடன் எந்நேரமும் கவி பாடக்கூடிய இவரது ஆற்றலை, கவி சமயம் என்றுஒருசமயம் என்று சொல்லுவார்கள். அந்தச் சமயம், சைவ சமயம் முதலிய சமய வகைகளைச் சேராதது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவப் பருவம் நோக்கி, நன்றாகக் கனிந்து விட்டது என்ற கண்ட பொழுது ஏற்ற சந்தர்ப்பங்கள் பாத்திரங்கள் நாடி அதனை இன்னும் பொறாது, பொறுக்க முடியாது கருவுயிர்த்தற்குச், சொல்லுருவத்திற்கு கண்டு களித்தற்கு முகஞ் செய்கிறான். அம் முகத்திற்குக் கவி சமயம் என்று பெயர் வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு சமயம் மகாலிங்கசிவத்திற்கு இல்லை. எந்தச் சமயமும் அந்தக் கவிஞருக்குக் கவி சமயமே. இருடி கருப்பத்திற்கு இனி என்ற வார்த்தை இல்லை. மகாலிங்கசிவத்துக்குப் பிறகு என்ற பேச்சில்லை எனப் பாராட்டியுள்ளார்.

இவர், தனது பன்னிரண்டாம் வயதிற் பாடிய, பழனிப் பதிகம் உள்ளிட்ட பல ஆக்கங்கள், பேணுவார் இன்மையால் அழிந்து போயின. சில தனிப் பாடல்களும் ஈழ மண்டலசதகம், இராமநாத மான்மியம், கணேசையர் மலர், ஈழகேசரி மலர் என்பவற்றில் இவர் எழுதிய சிறப்புப் பாயிரங்களுமே இன்று கிடைக்கின்றன. இந்த ஆக்கங்கள் மூலம் இவரது கவித்துவச் சிறப்பையும், சிறு வயதிலேயே கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்பட்ட இவரது கற்பனை ஆற்றலையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

சிரங்கு காரணமாகச் சொறிந்து கொண்டிருந்த ஒருவரைப் பார்த்துப் பாடிய பாடலில்,
'குரங்கே உனக்கு மரந்தடி தான் என்ன குத்ததையோ?
சிரங்கே உனக்கு நெடுந்தொடை தான் என்ன சீதனமோ?'

என்னும் ஈரடிகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆங்கிலத்தை மிலேச்ச பாஷை என வெறுத்து, அதனைக் கற்காதிருந்த மகாலிங்கசிவம், ஆங்கில, அந்நியப் பண்பாட்டு மோகத்தால் தம்மொழியையும் பண்பாட்டையும் மறந்தவர்களைக் கண்டித்துப் பல பாடல்களை இயற்றியுள்ளார்.
தம்முடைய சாதியையும் தம்முடைய பாஷையையும்
தம்முடைய நாட்டினையும் தாழ்த்துரைப்பார் - புன்மையென்னே
வேசியராய் முற்பிறப்பில் மானத்தை விற்றுண்ட
நீச சுபாவம் நினை.

நாட்டுப் பொருளிருக்க நாடாமல் அந்நியர்தம்
நாட்டுப் பொருளழகை நாடுவதேன் - வீட்டுக்
கொழுநன் அழகிலன்என் றன்னியர்தம் கோலம்
விழைகுநரும் உண்டுபுவி மேல்

அற்பகலா யாக்கைக் கலங்காரஞ் செய்வதினாற்
பொற்பகலா நேரநிதி போக்குகின்றார் - சிற்சிலரேன்
தீங்கில்பத நீருக்கேல் சீனிகைக்குந் தேநீர்க்கேல்
ஆங்கமைவ தென்றே யறி
என்னும் பாடல்களில் இத்தன்மயைக் காணலாம்
சக்தி உபாசகரான மகாலிங்கசிவம், 1939ம் ஆண்டு ஈழகேசரி ஆண்டு மலரில் அன்னை தயை என்னும் கதையை எழுதியுள்ளார். 'இது சமயக் கதை என்றாலும் இதன் உருவமும் உள்ளடக்கமும் சமூகச் சார்பும் இதனைத் தகக்தொரு சிறுகதை ஆக்கியுள்ளன' என விமர்சகரான மயிலங்கூடலூர் பி.நடராஜன் தமது கட்டுரையொன்றிற் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையார் ம.க.வேற்பிள்ளை, மாமனார் சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரனார், தமையன் பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை என்ற சிறந்த இலக்கியக் குடும்பத்தில் வந்த மகாலிங்கசிவத்தின் மகளான பிரபாவதி அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆ.யு பட்டதாரி. கலாநிதி நடேசபிள்ளையின் சகுந்தலை வெண்பாவை மேற்பார்வை செய்து திருத்தும் வாய்ப்பைப் பெற்றவர். எனினும் தமது திறமைகள் வெளிப்படும் முன்னரே சிறுவயதிலேயே மரணம் அடைந்து விட்டார்.
மகாலிங்கசிவத்தின் மகன் புலவர் ம.பார்வதிநாத சிவம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற் புலவர் பட்டம் பெற்றவர். இரண்டு வரம் வேண்டும், இன்னும் ஒரு திங்கள், இரு வேறு உலகம், பசிப்பிணி மருத்துவன் முதலிய கவிதைத் தொகுதிகளைத் தந்து, கவிதைப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

மகாலிங்கசிவத்தின் குடும்பம் பற்றிக் கூறிய சுவாமி விபுலானந்தர் 'யாழ்ப்பாணத்திலே நான் ஆசிரியத் தொழில் நடாத்திய காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் மகாலிங்கசிவத்தின் உடன் பிறந்தாரையும் சுற்றத்தார் பலரையும் கண்டு பழகி உறவு பூண்டேன். ஆடவர், பெண்மக்கள் ஆகிய அனைவரும் சிறந்த தமிழ்ப்புலமை எய்தியிருப்பதை நோக்கி, மகாலிங்கசிவம் பிறந்த குடும்பமே புலவர் குடும்பம் எனத் தீர்ப்பிட்டேன் என்கின்றார்.

இத்தகைய சிறப்புக்கள் மிக்க மகாலிங்கசிவம் 13.03.1941இல் அமரரானார். இவரைப்பற்றிய மேலதிக தகவல்களுக்கு எனது 'குருகவி ம.வே.மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும் என்ற நூலைப் பார்க்கவும்.




No comments:

Post a Comment