பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை



ம.பா.மகாலிங்கசிவம்

உரையாசிரியர் என்றும் பிள்ளைப் புலவர் என்றும் போற்றப்பட்ட ம.க.வேற்பிள்ளையின் மூத்த மகனே பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை. இவர் 1885ஆம் ஆண்டு மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் மட்டுவிலிற் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியைப் புலோலியில் வேலாயுதபிள்ளை என்பவர் தொடங்கிய பாடசாலையிற் பெற்றார். புலோலியில் ஆங்கிலக் கல்வியையும் பெற்றதுடன் தந்தையாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் புராணங்களையும் கற்றார்.
இவருக்குச் சிறு வயதாக இருந்த போதே சென்னை, சிதம்பரம் நாவலர் பாடசாலைக்குத் தலைமை ஆசிரியராகத் தந்தையார் சென்றுவிட்டார். அதனால் மாமனரான சைவப் பெரியார் சிவபாதசுந்தரனாரின் பராமரிப்பிலேயே இவரும் நான்கு சகோதரர்களும் வளர்ந்தனர். சம்பந்தரின் சைவத் தமிழ்ப் பணிகளுக்கான அடித்தளம் மாமனாராலும் தந்தையாராலும் இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தர், கல்வி கற்பது நிறைவடைந்ததும் தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்டதும் அக்காலத்தில் அமெரிக்க மிஷன் பாடசாலை என்று அழைக்கப்பட்டதுமான மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலை பாடசாலையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1912ஆம் ஆண்டு தொடக்கம், தாம் ஓய்வு பெறும் வரை 35 ஆண்டுகள் யாழ்.இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இங்கு இவர் கற்பித்த பாடங்கள் தமிழும் சமயமும் ஆகும். மரபு வழிக் கல்வி மூலம் வந்த இலக்கிய இலக்கண அறிவைப் பெற்றிருந்ததோடு நகைச்சுவையாகவும் கற்பிக்க வல்லவராக இருந்தமையால் உயர் வகுப்பு மாணவருக்குக் கலகலப்பாகக் கற்பித்து வந்தார்.

1912ம் ஆண்டிலிருந்து இந்து சாதனம் பத்திரிகையின் உதவிப் பத்திரிகையாசிரியராக 32 வருடங்கள் பணி புரிந்தார். இவரது விடா முயற்சியாலே, மாதம் இருமுறை வெளிவந்த பத்திரிகை வாரம் ஒருமுறையாக வெளிவரத் தொடங்கியது.

இந்து சாதனம் சம்பந்தர் என்றவுடன் எவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உலகம் பலவிதம் என்ற தலைப்பில் இவர் எழுதிய தொடர் கதைகளே. இத் தொடர் கதைகள் வெளி வந்த காலத்தில் அதிகாலையிலேயே மக்கள் பத்திரிகையைப் பெற முண்டியடிப்பார்கள். சமயப் பத்திரிகையாக மட்டுமே வெளிவந்த இந்து சாதனத்தை இலக்கியப் பத்திரிகையாகவும் மாற்றியவர் சம்பந்தரே.

சம்பந்தரின் தொடர் கதைகள் பின்னர் கோபாலநேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம் நேசமணி என்னும் மூன்று நாவல்களாக வெளிவந்தன. இந்நாவல்கள் ஈழத்து நாவல் உலகிற் சம்பந்தருக்கு முக்கியமான இடத்தைப் பெற்றுக் கொடுத்தன. ஈழத்தின் முதற் பெண் நாவலாசிரியரான மங்களநாயகம் தம்பையா, நொறுங்குண்ட இருதயம் என்னும் கிறிஸ்தவ மதச் சார்பான நாவலை வெளியிட்ட காலப் பகுதியிற் சம்பந்தரின் நாவல்கள் சைவ சமயச்சார்பானவையாக அமைந்தன. இவர் எழுதிய ஓம் நான் சொல்லுகிறேன் என்னும் சிறுகதை இடைநிலை வகுப்புப் பாடநூலில் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாடகத் துறையிலும் ஆர்வம் மிக்கவராகச் சம்பந்தர் இருந்தார். இந்துக் கல்லூரியி;ல் இவரது காலத்தில் (1920) உருவாக்கப்பட்ட நாடகக் கழகத்தின் மூலம் பல நாடகங்கள் மேடையேற வழிகாட்டியாக இருந்தார். 1914இல் வண்ணார்பண்ணையில், சம்பந்தர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோர் இணைந்து சரஸ்வதி விலாச சபை என்னும் நாடகக் கழகத்தை ஆரம்பித்தனர். இச் சபையினர் வழங்கிய எட்டு நாடகங்களில் ஆறு நாடகங்களைச் சம்பந்தரே எழுதினார். அவர் எழுதிய நாடகங்களில் உருக்குமாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், ஆரணிய காணடம், அயோத்தியோ காண்டம் என்பவை குறிப்பிடத்தக்கவை.

தந்தையாரான ம.க.வேற்பிள்ளையின் வழியிலே சிறந்த உரையாசிரியராகவும் விளங்கிய சம்பந்தர், கதிர்காமவேலன் திருவருட்பா, கல்வளை அந்தாதி, நமச்சிவாய மாலை என்னும் நூல்களுக்கு முழுமையாக உரை எழுதியுள்ளார். மாணவர்களுக்குரிய பாடநூல்களாக அமைந்த கம்பராமாயணம் மாரீசன் வதைப்படலம், திருக்குறள் முதல் இருபது அதிகாரங்கள், வில்லிபாரதம் இரண்டு சருக்கங்கள் முதலிய பல நூல்களுக்கு அவர் பகுதிகளாக உரை எழுதியுள்ளார். தான் உரை எழுதிய நூல்களும் தொகுப்பு நூல்களுமாக நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த சிறந்த பதிப்பாசிரியராகவும் சம்பந்தர் விளங்கினார்.
இப் பணிகள் மட்டுமன்றி நாவலர் வழியைப் பின்பற்றிப் பிரசங்கம் செய்தல், பத்திரிகை மூலம் சமய கண்டனம் செய்தல், ஆலயப் புனருத்தாரணம் செய்தல், சமயப் பெரியார் வரலாறு, விரத மகிமை கூறும் நூல்களை வெளியிடல் போன்றவற்றிலும் இவர் ஈடுபட்டார். 1955ம் ஆண்டு சம்பந்தர் தமது எழுபதாவது வயதிற் காலமானார். இவர் பற்றிய மேலதிக தகவல்களுக்கு எனது 'பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளை' என்னும் நூலைப் பார்க்கவும்.











நன்றி இலக்கியப்பூக்கள்

No comments:

Post a Comment