Wednesday, March 13, 2013

இலக்கியச் சோலையில் இனிய மலர்கள்


ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் அவையில் பெருமதிப்புடன் வீற்றிருந்த காலம் இலக்கிய உலகிற்குச் சிறந்த காலம். அதே காலத்தில் தான் கம்பர் புகழேந்தி, ஒளவையார் ஆகிய புலவர்களும் வாழ்ந்தார்கள். இத்தனை பெரிய புலவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்து எங்கள் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தனர். ஒட்டக்கூத்தர் சிற்றின்பப் பாடல் பாடுவதிலும் வல்லவர், பேரின்பப் பாடல் பாடுவதிலும் வல்லவர். அவருடைய பாடல்களுள் ஒன்று

'இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற இளமுலையாள் - இவ்வளவாய்
நைந்த உடலாள் நலமேவ மன்மதன் தன்
ஐந்து கணையால் வாடினாள்'

சிற்பம் செய்யும் சிற்பக் கலைவல்லார் கண் இந்த அளவு காது, இந்த அளவு தோள், இந்த அளவு, தனம் இந்த அளவு. இடை இந்த அளவு என அளவுகளை வைத்துக்கொண்டு சிற்பத்தை வடிவமைப்பார்கள். இந்த அளவு ஓவியக்கலைக்கும் அவசியம், அழகுசார் கலைகள் அனைத்துக்கும் அவசியம்.
சோழ நாட்டில் கலைவல்லான் ஆகிய இறைவன் ஒரு அழகிய பெண்ணைப் படைத்தான். இறைவன் எந்த அளவு கருவியும் வைத்துக் கொள்ளாது ஒரு பெண்ணைப் படைத்தான். ஆனால் எல்லாம் அளவாக அமைந்த அழகாக அப்பெண் விளங்கினாள் என்கிறார் ஒட்டக்கூத்தர்.
அந்தப் பெண் இவ்வளவு என்று சிறப்பித்துக் கூறக்கூடிய அளவான கண்ணினாள் என்றார். கண் விசாலமானது இடை எப்படி இடை விசாலமானதன்று மிகச் சிறியது. அதனால் இவ்வளவு என்னும் சிற்றிடையாள். இவ்வளவு சிற்றிடை அவ்வளவு தனபாரத்தைத் தாங்குமா? தாங்கும் ஏனென்றால் அவள் அதிசயப் பெண்ணாயிற்றே.
இவள் தேவமகளோ அல்லது மயில்களுக்குள் சிறந்த மயிலோ என்று பிறர் வியக்க விளங்கிய அவள் இப்போது மன்மதன் அம்புகளால் நைந்துவிட்டாள். அவளைக் காப்பாற்றத் தலைவனால்தான் முடியும்.
மொழி அறிவும் கவித்துவமும் வாய்க்கப் பெற்றவர் ஒளவையார். அவர் பாடல்கள் முடியரசரையும் கவர்ந்தன. குடிமக்களையும் கவர்ந்தன. தமிழ் அறிந்தோர் எல்லோரையும் கவர்ந்தன.
மனத்தை எந்தப் பொருள் கவர்கிறதோ அந்தப் பொருளின் சிறப்பைப் பாடுவது புலவர் இயல்பு.
நீராடிச் சென்ற ஒரு இளம் பெண்ணைத் தலைவன் கண்டான். அவளுடைய செம்பொன் மேனியில் நீர்த்துளிகள் முத்துப்போல் ஒளி செய்தன. இந்தக் காட்சியைக் கண்ட தலைவனின் மனநிலையை ஒளவையார் கண்டார். உடனே இனிய பாடல் ஒன்று-

'ஆராயிரம் கொண்ட வைவேல் சதிஅகன்கிரியில்
நீராடப் போகும் நெறிதனிலே அந்தி நேரத்தில்
சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொருபெண்
போனாள் பிடிபிடி என்றே நிலவும் புறப்பட்டதே!

ஆத்தி மரங்கள் ஆயிரம் விளங்கும் மலைச் சாரலிலே பெண்கள் நீராடப் போகும் வழியிலே இளம் பெண் ஒருத்தி குங்குமச் சிமிழ் போன்ற மார்பகங்கள் பொலிந்து விளங்கச் சிரித்தபடி போகிறாள். நிலவு உதிக்கும் நேரமாதலால் மக்கள் அவளை நிலவென்று மயங்கி நிற்கிறார்கள். இந்த மண்ணக நிலவு செல்வதை விண்ணக நிலவு கண்டுவிட்டது. விண்ணக நிலவு வானில் புறப்பட்டது.
நான்தான் உண்மை நிலவு, அவள் போலி. அவள் மக்களை ஏமாற்றப் போகிறாள் பிடியுங்கள்! பிடியுங்கள் என்றது.
தமிழ்ச் சொல்லின் அருமையைக் காண விரும்பினால் நாலடியாரையும் திருக்குறளையும் படியுங்கள் என்றார் ஒளவiயார். 'சொல்லருமை நாலிரண்டில்' என்றார். அவைகளுடன் ஒளவையார் பாடல்களிலும் சொல்லருமையைக் காணலாம்.
அறம் எது, பொருள் எது, இன்பம் எது, வீடு எது என ஒவையாரில் மதிப்புள்ள வள்ளல் ஒருவர் கேட்டார். அதற்கு ஒளவையார் சற்றும் தாமதியாது ஒரு வெண்பாவில் நான்கையும் கூறினார்.

ஈதல் தான் அறம்.

தீவினைகள் நீக்கி விட்டுத்தன் முயற்சியால் தேடிக் கொள்வது தான் பொருள்.
காதல் இருவர் தம்முடைய கருத்துக்களிலே இணைந்தவராக ஆதரவுற்ற நிலையில் வாழ்ந்து வருதலே இன்பம். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் நுகர்ந்து பின் விடுபடுதலே வீடு என்றார்.
பிள்ளைகளின் வாழ்வு சிறப்பாக அமையவேண்டுமென்று அலையும் பெற்றோர் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களை நன்கு ஆராய வேண்டும்.
பணத்துக்காகவும் பதவிக்காகவும் திருமணம் செய்யும் நிலை மாறி கருத்து ஒருமித்தவர்களுக்குத் திருமணம் செய்யவே பெற்றோர் முன்வரவேண்டும்.
இதைத்தான் ஒளவையார் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்றார்.
இலக்கியச் சோலையில் நாம் காணும் இனிய மலர்கள் வண்ணங்களால் வேறுபடலாம், வடிவங்களால் வேறுபடலாம். ஆனால் எல்லாமே தேன் உடையவைகளாக அதாவது கருத்துடையவைகளாக விளங்க வேண்டும்.

- உதயன் - 29.5.2011

No comments:

Post a Comment