Wednesday, March 13, 2013

பத்திரிகைப் பணியில் எனது அனுபவம்


ஜனநாயக நாட்டில், ஜனநாயகம் என்ற மங்கை மகிழ்ச்சியோடு இருக்குங் காலத்தில் பத்திரிகையில் பணிபுரிவது மிகமிக மகிழ்ச்சியான அநுபவம். ஜனநாயக மங்கை அல்லலுற்றுக் கண்ணீர் சிந்தும் வேளையில் பணிபுரிவது ஆபத்தான காரியம். இந்த இரண்டு காலத்திலும் பணிபுரிந்த அநுபவம் எனக்கு உண்டு.
பத்திரிகை என்பது கலங்கரை விளக்கம் போன்றது. சரியான இலக்கை அது காட்டும். அதன் தனித்துவத்தில் மற்றவர் குறுக்கிடக்கூடாது. பத்திரிகை தர்மம் புனிதமானது, போற்றப்படவேண்டியது.

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மக்களுக்கும் சரியானதை நல்லதைக் கூறுவது அதன் கடமை. மற்றவர்களுக்கு அது சுவையாகவும் இருக்கும், கசப்பாகவும் இருக்கும். ஆனால் பத்திரிகை தன் தனித்துவத்தை இழக்கக்கூடாது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாளிதழ் எதுவும் வெளிவரவில்லை. அப்போது ஒரே ஒரு புகைவண்டி மாலையில் கொழும்பில் புறப்பட்டுக் காலையில் காங்கேசன்துறை வந்து சேரும். அதுதான் அப்போது தமிழில் வெளிவந்துகொண்டிருந்த வீரகேசரி, தினகரன் ஆகிய இதழ்களை நாள்தோறும் கொண்டுவந்து சேர்க்கும்.
அந்தப் பத்திரிகைகள் காங்கேசன்துறைக்குப் புகைவண்டி கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன் அச்சிடப்படுவதால் யாழ்ப்பாணம் சம்பந்தமான புதினங்களை யாழ்ப்பாண மக்கள் உடனுக்குடன் அறியமுடியாத நிலை இருந்தது.

இந்த நிலையை அவதானித்த பெரியார் கே.ஸி. தங்கராசா அவர்கள் 'ஈழநாடு' நாளிதழை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தார். ஈழநாடு மெல்ல மெல்ல, ஆனால் ஆரோக்கியத்தோடு வளர்ந்து யாழ்ப்பாணத்தில் உலாவரத் தொடங்கியது. ஈழநாடு நாளிதழ் புதினங்களை வழங்க ஈழநாடு வாரமலர் இலக்கிய வளர்ச்சியிலும் சமய வளர்ச்சியிலும் கவனம் செலுத்தியது.
எத்தனையோ கவிஞர்களை, எத்தனையோ சிறுகதை ஆசிரியர்களை, எத்தனையோ நாவல் ஆசிரியர்களை வளர்த்தெடுத்தது.

பத்திரிகைப் பணியில் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்திலேயே ஆர்வம் கொண்டிருந்த நான் ஈழநாடு பத்திரிகையில் ஒப்புநோக்குநராக இணைந்தேன். அப்போது எஸ்.எம். கோபாலரத்தினம் நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார். திரு. எஸ். பெருமாள் வார இதழுக்கு ஆசிரியராக இருந்தார். அன்பினாலும் உழைப்பினாலும் இணைந்த ஈழநாடு பணியாளர்கள் அனைவரும் குடும்பத்தை வளர்க்கும் ஒன்றுபட்ட பிள்ளைகள் போல் அயராது உழைத்தோம்.

விளம்பரங்கள் பெருமளவில் வரத்தொடங்கின. கொழும்புப் பத்திரிகைகளில் வராத யாழ்ப்பாணச் செய்திகள் உடனுக்குடன் ஈழநாட்டில் வெளிவந்தன. பாடசாலை மாணவர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய அம்சங்கள் பல இடம்பெற்றன. ஈழநாடு பத்திரிகை செல்வச் சீமாட்டியாக உலாவந்துகொண்டிருந்தது.

ஒப்புநோக்குநராக இருந்த நான் மெல்ல உதவியாசிரியராகிப் பின்னர் வாரமலர் ஆசிரியரானேன். வாரமலரை வளர்க்கும் ஆர்வத்தில் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களை அவர்களுடைய பத்திரிகை அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக எழுதுமாறு கேட்டேன். அவர் மனமுவந்து பதினைந்து தொடர் கட்டுரைகளை எழுதினார். அவருடைய எழுத்துக்களுக்கு உரிமையானவர்கள் இன்று அவற்றை நூலாக்கினால் அது சிறந்த பணியாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுப்பிரமணிய ஐயர் ஈழத்துக் கவிதைகள் என்ற தலபை;பில் கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகள் பின்பு நூலாக வெளிவந்தன.
அறிவும் அநுபவமும் என்ற பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலையரசு சொர்ணலிங்கம், கோகிலா மகேந்திரன் போன்றோரைப் பேட்டி கண்டு வெளியிட்டேன்.

ஈழநாடு செழித்து வளர்ந்து வாசகர்களுக்குப் பெரும் பயன் நல்கிய நேரத்தில் ஜனநாயகம் என்ற மாசில்லாத் தெய்வம் பெரும் சோதனைகளைச் சந்தித்தது. ஈழநாடு நாளிதழை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஈழநாட்டுப் பணிக்குப் பின்னர் சில காலம் முரசொலி பத்திரிகையிற் பணிபுரிந்து பின்னர் இன்று வெள்ளி விழாக்காணும் உதயன் பத்திரிகையில் இணைந்தேன்.
உதயன் பத்திரிகை திரு.ம.வ.கானமயில்நாதன், திரு. ந.வித்தியாதரன், திரு. பேரின்பம், திரு. குகநாதன் போன்றோரின் திறமையாலும் உழைப்பாலும் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

உதயன் ஆசிரியரும் ஆசிரிய பகுதியினரும் ஏற்கனவே பத்திரிகையில் நீண்டகால அநுபவம் உடையவர்யகளாகவும் திறமை உடையவர்களாகவும் இருந்தமையால் உதயன் பத்திரிகை மிக வேகமாக வளர்ந்தது. ஆரம்பகாலத்தில் உதயன் ஆசிரியரும் உதவி ஆசிரியர்களும் உதயன் வளர்ச்சிக்காக நாள்தோறும் பதினைந்து பதினாறு மணி நேரம் உழைத்தார்கள். அந்த உழைப்பு அந்த ஆர்வம் உதயனை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றச் செய்தது. காலத்துக்குக் காலம் உதயன் என்ற ஆலமரத்தை ஜனநாயகத்தையும் பத்திரிகைக் குரலையும் மதிக்காதோர் வெட்டிய போதும் மரம் வளர்ந்து கொணடிருக்கிறது. செய்தி என்ற பெரு நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

நான் உதயன் பத்திரிகையின் 'சஞ்சீவி' வாரமலர் பகுதியிலே பணிபுரிந்தேன். அப்போது சஞ்சீவி வாரமலர் ஆசிரியராகத் திரு.ந. வித்தியாதரன் அவர்கள் இருந்தார்கள். அவர் எழுத்தாற்றல் மிக்கவர். சிறந்த கவிஞர்கள், சிறந்த நாவல் ஆசிரியர்கள், சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். வாரமலர் ஆசிரியருக்கு எழுத்தாளர்கள் நண்பர்களாக இருப்பது நல்லதொரு வாய்ப்பு. சஞ்சீவியைச் சிறப்பாக வளர்த்தெடுப்பதற்கு அவர் அந்த வாய்ப்பை நல்லமுறையிற் பயன்படுத்தி வெற்றிகண்டார். சஞ்சீவியைப் பற்றிப் பேச்செழும்போதெல்லாம் அதில் வந்த வித்துவான் பதில்களைப் பற்றி வாசகர்கள் பேசத் தவறுவதில்லை. இப்போது மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவேண்டும் என்று கற்றோரும் பெற்றோரும் அரும்பாடுபடுகின்றனர். அப்போது மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் பணியைச் சஞ்சீவி சிறப்பாகச் செய்துகொண்டிருந்தது.
கவிதைப் பணியே செய்துகொண்டிருந்த என்னைச் சஞ்சீவி கட்டுரை எழுதத் தூண்டியது. சஞ்சீவியில் வெளிவந்த இலக்கியக் கட்டுரைகளுக்கு வாசகர் கடிதங்கள் பெரும் ஊக்கம் அளித்தன. வாசகர்களின் பாராட்டைப் பெற்ற அக்கட்டுரைகள் பின்பு 'தமிழ்ச் செல்வம்' எனும் நூலாக வெளிவந்தன.

பத்திரிகையில் பணிபுரியும் அனைவரும் ஒரு அநுபவத்தைப் பெறுவார்கள். அந்த அநுபவம் இலகுநடையில் எழுதும் ஆற்றலைக் கொடுக்கும். எனது கவிதைகளோ கட்டுரைகளோ இலகு நடையில் அமையப் பெரும் துணை புரிந்தது பத்திரிகைப் பணியே.

பத்திரிகைகள் எழுத்தாளர்களுக்கு ஆதாரமாக உள்ளன. எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கு ஆதாரமாக இருக்கின்றனர். இந்த இரண்டு ஆதாரங்களும் இணையும்போது, தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடைகிறது. தமிழ் இனம் மேலும் பெருமை அடைகிறது. 'மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்' என்பது உதயனின் மகுட வாக்கியம். மக்களின் மனம் நிறைவைப் பெற்றதே அதன் அதிவேக வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

மாணவர்கள், பத்திரிகையில் வரும் சொற்கள் சரியானவை என்று நம்புகிறார்கள். அதனை நன்கறிந்து கொண்ட உதயன் பத்திரிகை நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி வருகிறது. இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் உதயன் பத்திரிகையைப் போற்றுகிறார்கள் என்றால் அதற்கு உதயன் கையாளும் நல்ல தமிழே காரணம். யாழ்ப்பாணத்தின் எந்தக் கல்லூரியின் நூலகத்திற்குச் சென்றாலும் அங்கு உதயன் பத்திரிகை இருப்பதைக் காணலாம். பாடசாலைச் செய்திகளும் பாடசாலை நிகழ்ச்சிகளின் படங்களும் பாடசாலை விளம்பரங்களும் உதயன் பத்திரிகையில் வெளிவருவதையே பாடசாலைகள் விரும்புகின்றன.

மக்கள் மனம் கவர்ந்த பத்திரிகையாகிய உதயன், பாடசாலைகளைக் கவர்ந்தது போலவே ஏனைய துறையினரையும் கவர்ந்துள்ளது. எத்துறை சார்ந்தவர்களும் நல்ல வாழ்க்கை வசதிகளைப் பெறவேண்டும் என்ற உதயனின் நல்ல நோக்கமே இதற்கெல்லாம் காரணம்.
பத்திரிகைக்கு வேண்டிய சகல சிறப்பம்சங்களையும் தன்பாற் கொண்டு ஒரு சிறந்த பத்திரிகைக்கு இலக்கணமாக விளங்கும் உதயன் பத்திரிகையை அது வெள்ளிவிழாக் காணும் இவ்வேளையிற் பாராட்டுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

- உதயன் வெள்ளிவிழா மலா

No comments:

Post a Comment