Wednesday, March 13, 2013

அழகின் ஆற்றலும் தவத்தின் வலிமையும்


காலை இளம்பரிதியின் அழகு, மாலையில் அது கடலுள் மூழ்கும் அழகு, நீலவான் பரப்பில் வெண்முகில் ஆடைக்குள் உடல் மறைக்கும் முழு நிலவின் அழகு, குளத்தில் இருந்து புன்னகை புரியும் தாமரையின் அழகு, வண்ணப் பறவைகள் ஒருமித்து வான்வெளியில் அணிசெய்து பறக்கும் அழகு. இவை எவரையும் கவரும் இனிதான காட்சிகளே!

கவிதை அழகு, சிற்ப அழகு, ஓவிய அழகு என இவ்வுலகே அழகு மயமாக உள்ளது.
இந்த அழகில் எல்லாம் மனத்தைத் தோயவிடாது தவம் புரிவோரின் ஆற்றல் மிகப்பெரிது. சிலவேளைகளில் அழகின் ஆற்றலுக்கும் தவத்தின் வலிமைக்கும் போர் நிகழ்வது உண்டு. சிலவேளைகளில் தவத்தை அழகு வென்றுவிடுவதும் உண்டு.
வலிமை வாய்ந்த தவத்தில் விசுவாமித்திரருக்கு நாட்டம் ஏற்பட்டது. மக்கள் மத்தியில் வாழ்ந்து தவம் செய்வது அவருக்குப் பொருத்தமாகப் படவில்லை.
'தவத்தக்கொருவர்' என்ற கொள்கைப்படி கானகம் சென்றார். கானகத்தின் மத்தியில் பெரும் தவம் புரிந்தார். தவத்தில் தன்னை விஞ்சிய ஒருவனின் வளர்ச்சி தனது பதவிக்கும் சுக வாழ்வுக்கும் இடையூறாக அமையும் என்று எண்ணினான் இந்திரன். பஞ்சதந்திரமும் நன்கறிந்த இந்திரன் தவத்தை வலுவிழக்கச் செய்ய அழகால் முடியும் என்று நம்பினான்.
அழகே வடிவமான மேனகையை அழைத்து 'நீ இப்போது பூவுலகத்துக்குச் சென்று விசுவாமித்திரரின் தவத்தை வலிகெடச் செய்யவேண்டும்' என்றான்.
தேவர் தலைவனின் கட்டளையை மறுக்கமுடியுமா? பூவுலகம் வந்த மேனகை, விசுவாமித்திரர் தவம் மேற்கொண்ட இடத்தை அடைந்தாள்.
மேனகையின் காலில் இருந்து சலங்கை ஒலி பூவுலகம் முன்னெப்பொழுதும் கேட்டறியாத இனிய ஒலி. அந்த ஒலி காற்றுடன் கலந்து விசுவாமித்திரரின் செவிப் பறையைத் தாக்கியது. அவளுடைய வாசனைத் திரவியங்க்ள அமைந்த மேனியின் வாசனை முனிவரின் மூக்கின் வழி சென்று தாக்கி மேலும் அவரது தவத்தை-மௌனத்தை வலுவிழக்கச் செய்தது. முனிவரின் செவியும் மூக்கும் ஏமாந்த நேரத்தில் கட்புலனும் அவரைக் கைவிட்டது. மெல்லக் கண்ணைத் திறந்தார்.
மேனகையின் அழகைப் பார்த்த முனிவர் இவள் இந்தக் கானகத்தில் வாழும் தேவதையோ? என ஐயுற்றார். 'பல்லாயிரம் மயில்களிடத்தே தேர்ந்தெடுத்த தோகை அழகு மிக்க மயில்தானோ இவள்' என ஐயுற்றார். கூந்தலழகு வாய்ந்த மானிடப் பெண்தானோ? என ஐயுற்றார். 'எனது மனம் மயங்குகிறதே' என்று தடுமாறினார்.

'அணங்குகொல் ஆய்மயில் கொல்லே கனங்குழை
மாதர் கொல்மாலும் என் நெஞ்சு' என்று ஐயுற்றார்.
'ஐயுற்றது போதும் மெய்யுற்றுப் பாரும்' என்றன மேனகையின் விழிகள். விசுவாமித்திரர் மெய்யுற்றார்.

கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் மோந்தும், மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும் பெண்ணிடத்து உண்டென்றுணர்ந்தார்.

'கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள'

என்று அறிந்தார். தவத்தின் வலிமையை இழந்தார். அழகின் ஆற்றல் வென்றது.
முனிவர் ஒருவர் நீராடிய பின் ஆடையைக் கொடியிற் காயப்போட்டார். ஒரு கொக்கு ஆடையில் எச்சமிட்டது. அப்போது அவர் கொக்கைச் சினந்து பார்த்தார். அவரது தவ வலிமை கொக்கைச் சாம்பலாக்கியது.
அந்த முனிவர் பின்னொரு சந்தர்ப்பத்தில் திருவள்ளுவர் வீட்டுக்குச் சென்றார். அப்போது திருவள்ளுவர் உணவருந்திக் கொண்டிருந்தார். திருவள்ளுவரின் துணைவியார் வாசுகி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் வீட்டுக்குச் சென்ற முனிவர் தம் வருகையை உணர்த்தினார்.
வாசுகி திருவள்ளுவருக்கு உணவு பரிமாறி முடித்த பின்னரே முனிவரை நோக்கிச் சென்றார்.
காலதாமதமாக வாசுகியார் சென்றது முனிவருக்குச் சினத்தை ஏற்படுத்தியது. தம் தவவலிமையை உணர்ந்த முனிவர் முன்பு கொக்கைச் சினந்து பார்த்தது போல் வாசுகியையும் சினந்து பார்த்தார்.
'கொக்கென்று நினைத்தீரா முனிவரே' என்று வாசுகி கேட்டார். முனிவரின் சினத்தால் சாம்பலாகிய கொக்கைப் போல வாசுகி சாம்பலாகாது அப்படியே நின்றார்.
இல்லறத்தில் நின்று கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்ணின் கற்புக்குத் தவத்தின் வலிமையைவிட ஆற்றல் அதிகம் என்பதை உணர்ந்தார்.
நாயன்மார்கள் அழகில் மயங்காதவர்கள் அல்லர். 'பொன்னடியே பரவினாலும் என்று இறைவனின் பொன்மயமான எழில் மேனியையும் சோதியே! சுடரே! சூழொளி விளக்கே என்று அவனது பிரகாசத்தையும் பாராட்டி அழகை ரசித்திருக்கிறார்கள். இறைவனே ஒளிமயமானவன்.

உதயன் 18.12.2011

No comments:

Post a Comment