Wednesday, March 13, 2013

நீதி கிடைக்காத மக்கள் சொரியும் கண்ணீர் நீதிவானாக மாறி ஆட்சியாளரை வேரோடு அறுக்கும்!

கண்ணீருக்கு அஞ்சாத குடும்பமோ நாடோ நிம்மதி காணமுடியாது. வீட்டில் தலைவியின் கண்ணீருக்குத் தலைவன் அஞ்சவேண்டும். அது குடும்பப் பண்பாடு. நாட்டில் குடிமக்களின் கண்ணீருக்கு ஆட்சியாளர் அஞ்சவேண்டும். அது அரசியல் பண்பாடு, கண்ணீருக்கு அஞ்சாத குடும்பத்தையோ ஆட்சியையோ மும்மூர்த்திகளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிறான் அரசன் ஒருவன். அவன் அரசனாகவும் இருக்கிறான், அதே நேரத்தில் புலவனாகவும் இருக்கிறான். அவன்தான் அதிவீரராம பாண்டியன்.

ஆட்சியில் இருப்பவன் ஒருவன் குடிமக்களின் வழக்கு ஒன்றை எப்படி ஆராயவேண்டும் என்பதையும் கண்ணீருக்கு எப்படி அஞ்ச வேண்டும் என்பதையும் அதி வீரராமபாண்டியன் ஒரு பாடலில் கூறுகிறான். அவன் கருத்து குடி ஆட்சிக்கும் பொருந்தும், முடி ஆட்சிக்கும் பொருந்தும்.
வழக்கு ஒன்று ஆட்சியாளரின் முன்னிலையில் வரும்போது ஆட்சியாளர் வழக்குத் தொடர்பான இரு தரப்பினரும் கூறும் கருத்தை ஏழு முறை கேட்கவேண்டும். நீதி தவறாது இரு கட்சியினரும் ஏற்றுக்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கவேண்டும். ஆட்சியாளர் வழங்கும் தீர்ப்பிலே நீதி கிடையாமல் ஒரு பகுதியினர் கண்ணீர் விடும் நிலை ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் கண்ணீர் நீதிவானாக மாறி நீதி பிழைத்த ஆட்சியாளரையும் அவர் பரம்பரையையும் வேரோடு அறுத்துவிடும் என்கிறார். நீதி பிழைத்த ஆட்சியாளரை மும்மூர்த்திகளே வந்தாலும் கண்ணீரிலிருந்து காப்பாற்ற முடியாது என்கிறார். அதிவீரராம பாண்டியனின் அந்தப் பாடல் வருமாறு :-

'இருவர்தம் சொல்லையும் ஏழு தரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே.
கண்ணீர் பற்றித் திருவள்ளுவர்

அரசன் நாற்படை வலிமை உடையவனாக இருக்கலாம். வீராதி வீரனாக இருக்கலாம். ஆயினும் குடிமக்களின் கண்ணீரை அவன் மதிக்கவில்லை என்றால், குடிமக்கள் சொரியும் கண்ணீரே ஆட்சியை விழுத்திவிடும் என்கிறார்.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை'

அரசன் நீதி வழங்காமையால் குடிமக்கள் துன்பப்பட்டு அழுத கண்ணீர் அரச செல்வத்தைத் தேய்க்கும் படை என்கிறார்.

பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு முதலில் தெரிந்தது
கண்ணகியின் கண்ணீரே! - அதனால் அவன் அரசனே!!


பாண்டியன் நெடுஞ்செழியன் சிறிதும் ஆராயாது கோவலனைக் கொன்ற பெரும் தவறு புரிந்தான். ஆயினும் கண்ணீருக்கு அஞ்சும் பண்பு அவனிம் இருந்தது. கண்ணகியைக் கண்டதும் அவன் கேட்ட கேள்வி :-

'நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரையோ நீ மடக்கொடி?' என்பதாகும்.

பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு முதலில் தெரிந்தது கண்ணகியின் கண்ணீர் தான். அவன் அரசனாயினும் மக்களின் கண்ணீருக்கு அஞ்சினான். அதனாலேயே நீர் சொரியும் கண்களை உடையாய்! எம் முன் வந்து நிற்கின்றாய்! 'நீ யார்?' என்கிறான்.
ஆட்சி குடியாட்சியாகவும் இருக்கலாம்| முடியாட்சியாகவும் இருக்கலாம். வலிமை உடையதாகவும் இருக்கலாம். ஆனால் குடிமக்களின் கண்ணீர் இவற்றை எல்லாம் அழித்துவிடும்!

உதயன் 1.6.2008

No comments:

Post a Comment