Wednesday, March 13, 2013

காட்டு மயிலுக்குப் போர்வை கொடுத்தவன் வீட்டு மயிலுக்குத் துன்பம் கொடுத்தான்!



கடை எழுவள்ளல்களுள் ஒருவன் பேகன். இவன்பனிக்குளிரில் வாடிய மயிலுக்குத் தன் போர்வையை எடுத்துப் போர்த்தவன். இந்தக் கொடைச் சிறப்பை அறிந்த கபிலர் இவனைக் காண விரும்பி இவனிடம் சென்றார்.
பேகனின் மாளிகைக்குச் சென்ற கபிலர், பேகனையும் அவனது நாட்டு வளத்தையும் பாடினார். பேகனை அவரால் நேரில் சந்திக்க இயலவில்லை. அப்போது பேகனின் மாளிகையிலிருந்து ஒரு அழுகுரல் கேட்டது. அந்த அழுகுரலிற்கூட ஒரு மென்மை தெரிந்தது. அந்த அழுகுரல் புல்லாங்குழல் இரங்கி ஒலிப்பது போல ஒலித்தது.

கபிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. பேகனின் நாட்டில் எவரும் கண் கலங்கியது இல்லை. எல்லோரும் பசி, துன்பம் அற்ற நல்வாழ்வு வாழ்கின்றனர். காட்டு மயிலின் குளிர் நீக்கத் தனது போர்வையைக் கொடுத்தவன் பேகன். அப்படிப்பட்டவன் தன் வாழ்க்கைத் துணைவியைக் கண்ணீர் சொரிய விடுவானா? வீட்டுக்கு ஒரு நீதி, நாட்டுக்கு ஒரு நீதி புரிவானா பேகன்? என்றெல்லாம் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார் கபிலர்.
பேகன் மாளிகையில் இருந்து கொண்டு பெரும் புலவரான தனது வரவை ஒருபோதும் அலட்சியம் செய்யமாட்டான்.
அப்படியானால் அவன் எங்கோ வேறிடத்தில் இருக்கிறான். அவன் எங்கே வேறிடத்தில் இருக்கிறான்? அவன் அவ்விதம் வேறிடம் சென்றதற்கு ஏன் அவனுடைய துணைவி அழவேண்டும்? அவள் அழுவதானால் பேகன் அவளுக்கு ஏதோ துரோகம் செய்துவிட்டான் என்று பொருள்.
எல்லோருமே உயர்ந்த வாழ்வு வாழவேண்டும் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கும் சங்கச் சான்றோராகிய கபிலருக்குப் பேகன் மீது வெறுப்பு ஏற்பட்டது. அவன் துணைவி மேல் கருணை உண்டாகியது.
பேகன் என்ற அந்தக் கொடை வள்ளல் வேறொரு பெண்ணின் அழகில் மயங்கி அந்தப் பெண்ணுடன் வேறோரிடத்தில் தங்கிவிட்டான் என்பது கபிலருக்குத் தெரியவந்தது. பேகன் இருக்கும் இடம் அறிந்து கபிலர் அங்கே விரைந்தார். பேகனைச் சந்தித்தார். அவர் பேகனை விளித்த விதமே சுவை நிறைந்ததாக உள்ளது. 'மடத்தகை மாமயில் பனிக்கும்' என்று அருளிப் 'படாஅம் ஈத்த கெடா அ நல்லிசைக் கடா அ யானைக் கலிமான் பேக' என்று கபிலர் பேகனை விளித்தார்.
'மயில் பனியால் நடுங்குமெனப் போர்வை அளித்த புகழுடைய பேகனே' என்றார். காட்டு மயிலுக்குப் போர்வையளித்துவிட்டு வீட்டு மயிலுக்கு ஏன் துரோகம் இழைத்தாய் என்பது குறிப்புப் பொருள். கெடாத புகழையுடைய பேகனே! என்றார். இச் செயல் நின் புகழைக் கெடாதா? என்பது குறிப்புப் பொருள்.
'பசித்தும் வாரேம் பாரமும் இலமே' என்றார்.
நான் நின்னிடம் பொருள் பெற்றுப் பசி தீர்க்கவும் வரவில்லை. எனக்குப் பாரமாக வறிய சுற்றத்தார் எவரும் இல்லை.
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய் என இஃதியாம் இரந்த பரிசில்' நீ உனது இல்லறம் கெடாதவாறு, அறம் செய்துகொள். விரைந்து சென்று உனது துணைவியின் கண்ணீரை நிறுத்து. இதுவே நான் உன்னிடம் கேட்கும் பரிசில் என்றார் கபிலர்.
சாதாரண மனிதரைப் பற்றக்கூடிய சபலம் பேகனையும் பற்றிக் கொண்டாலும் கூட, பேகன் சான்றோர் வாக்குக்குக் கட்டுப்படுபவனே!
கபிலரின் பேச்சைக்கேட்ட பேகன் தன் செயலுக்கு நாணினான், தனது துணைவியின் நிலைக்கு இரங்கினான்.
தன்னை நிலைதடுமாறவைத்த ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தி னான். கபிலர் மனம் மகிழும்படி உடனே தன் மாளிகைக்குப் புறப்பட்டான். தனது துணைவி மகிழும்படி மாளிகையில் தங்கினான்.

உதயன் 19.7.2009

No comments:

Post a Comment