Wednesday, March 13, 2013

துரியோதனனிடம் விரவியிருந்த உலகு வியக்கும் நற்பண்பு



அரசர்கள் சூதாடுவது அன்றைய பொழுது போக்கு. உயிர் நண்பர்களாகிய கர்ணனும் துரியோதனும் நேரம் கிடைக்கும் போது சூதாடிப் பொழுது போக்குவதுண்டு. ஒருநாள் கர்ணன் பொழுது போக்குவதற்காகச் சூதாடத் துரியோதனனிடம் சென்றான். அப்போது துரியோதனன் மாளிகையில் இல்லை. துரியோதனனின் மனைவி மட்டுமே இருந்தாள்.


பிறர் மனைவியரைச் சகோதரிகளாகவே மதிக்கும் கர்ணன் 'தங்கையே! துரியோதனன் வரும்வரை நீ என்னுடன் சூதாடு. துரியோதனன் வந்ததும் அவனுடன் சூதாடிப் பொழுதைக் கழிக்கின்றேன்'. என்றான்.

கர்ணனின் கொடைச் சிறப்பையும் பிறர் மனைவியாரைச் சகோதரியாக நினைக்கும் பண்பையும் தெரிந்திருந்த துரியோதனனின் மனைவி சூதாட உடன்பட்டாள்.

ஆரம்பத்தில் துரியோதனனின் மனைவி சூதாட்டத்தில் வென்று கொண்டிருந்தாள். இது துரியோதனனின் மனைவியை சூதாட்டத்தில் வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தைக் கர்ணனுக்கு உண்டாக்கியது. கர்ணன் மிகுந்த திறமையுடன் விளையாடி வெல்லத் தொடங்கினான். வெற்றியால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் கர்ணன் குழந்தை உள்ளம் கொண்டவனாகித் தன்னை மறந்து சூதாட்டத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தினான்.

அப்போது துரியோதனன் மாளிகை வாசலில் வரும் காட்சி துரியோதனனின் மனைவிக்குத் தெரிந்தது. கணவனை உபசரிக்கச் சூதாட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தாள்.

சூதாட்டத்தில் வெற்றியீட்டிக் கொண்டிருந்த கர்ணனுக்குத் தான் சூதாட்டத்தில் வெற்றியீட்டிக் கொண்டிருக்கும் வேளை சூதாட்டத்தை நிறுத்தித் திடீரெனத் துரியோதனனின் மனைவி எழுந்தது சினமூட்டியது. சூதாட்டத்தில் தன்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த கர்ணன் 'நான் வெல்லும் போது சூதாட்டத்தைக் குழப்பாதே!' என்று கூறி அவளது புடைவை முன்தானையைப் பிடித்தான். அவளது மேகலை அறுந்து முத்துக்கள் சிதறின.

அந்நேரம் துரியோதனன் மாளிகையின் உள்ளே வந்து கொண்டிருந்தான். மனத்தில் எவ்வித சலனமுமின்றி 'இந்த முத்துக்களை எடுக்கவோ? கோக்கவோ' என்றான்.

கொடிய பாத்திரமாகவே காணப்படும் துரியோதனன் 'எடுக்கவோ? கோக்கவோ?' என்று கேட்ட நேரத்தில் குணம் என்னும் குன்றை எட்டித் தொட்டுவிட்டான்.

தன் மனைவியையும் தன் நண்பனையும் சந்தேகப்படாத துரியோதனனின் இந்த உயர்ந்த குணத்தைக் கர்ணனே கூறுகின்றான்.

கிருஷ்ணபிரான் மூலம் குந்திதேவிக்கு ஒரு உண்மை தெரியவருகிறது. கர்ணன் குந்திதேவியின் மூத்த புதல்வன் என்பதே அந்த உண்மை.

இதனை அறிந்த குந்திதேவி கர்ணனிடம் செல்கிறாள். தான் கர்ணனின் தாய் என்பதை நிரூபிக்கிறாள். தன் தாயைக் கண்ட கர்ணன் பெருமகிழ்ச்சியடைகின்றான்.
கர்ணனின் மகிழ்ச்சியை அறிந்த குந்திதேவி தன்னுடன் வந்துவிடும்படி கேட்கிறாள். நீ அரசனாக இருக்க உன் தம்பியர் ஐவரும் உனக்கு ஏவல் செய்வர் என்கிறாள்.

கர்ணன் அதற்குப் பதிலாக கீழ்க்கண்டவாறு கூறுகிறான்.
'மடந்தை பொன் திருமேகலை மணி உகவே
மாசறத் திகழும் ஏகாந்த
இடந்தனில் புரிந்தேநான் அயர்ந்திருப்ப
எடுக்கவோ? கோக்கவோ? என்றான்
திடம் படுத்திடுவேல் இராச ராசனுக்குச்
செருமுனைச் சென்று செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே எனக்கினிப் புகழும்
கருமமும் தருமமும்'

வில்லிபுத்தூரரின் கவிச்சிறப்பை இந்தப் பாட்டில் வரும் 'மாசறத் திகழும் ஏகாந்த இடம்' என்ற தொடரில் அறியலாம்.

கர்ணனும் துரியோதனனின் மனைவியும் இருந்த இடம் தனிமையான இடம். அங்கு யாரும் இல்லை. ஆனால் அது மாசறத் திகழும் இடம்.

பிறன் மனைவியைத் தங்கையாக நினைப்பவனின் மனம் மாசறத் திகழும் இடம். கணவனின் நண்பனைத் தமையனாக நினைக்கும் பெண்ணின் மனமும் மாசறத் திகழும் இடம்.

இந்த மாசற்ற உள்ளங்களைக் கண்டு சந்தேகப்படாத துரியோதனின் மனமும் மாசற்ற இடமே!

தீமைகளின் புகலிடமாக விளங்கியவன் துரியோதனன். அந்தத் துரியோதனனிடம் சாதாரண மனிதர் சிலரிடம் காணமுடியாத - தன் மனைவியையும் நண்பனையும் சந்தேகப்படாத தெய்வக் குணம் இருந்திருக்கின்றதே! இது வியப்புக்குரிய ஒன்றல்லவா?

உதயன் 27.9.2009

No comments:

Post a Comment