Wednesday, March 13, 2013

மற்றவர் மனங்களை தம் பக்கம் கவர வழிசெய்வது பேச்சுத்திறன்| உண்மையை நிலைநிறுத்தி உறுதியாக்கும் பெரும் சக்தியும் அதற்குண்டு



இன்று பாடசாலைகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. இவைகள் எல்லாம் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நன்முயற்சிகளே!

அரசியலில் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜகஹர்லால் நேரு ஆகியோர் தமது பேச்சுக்கலையினால் அருஞ்சாதனை புரிந்தனர்.

ஆன்மீகத்தில் ஆறுமுகநாவலர் அவர்களும், திருப்பாப் புலியூர் ஞானியார் அடிகளும் பேச்சுக் கலையால் சாதனை படைத்தனர்.


பேச்சாற்றல் வாய்ந்த ஒருவன் கட்டளையிட்டால் உலகம் அதனை விரைந்து கேட்கும் என்பதைத் திருவள்ளுவர்

'விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்' என்ற குறள் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்.

இக்கருத்தை 'நா அசைந்தால் நாடசையும்' என்று பிற்காலத்தவர் பேச்சாற்றலை விளக்கப் பயன்படுத்தினர்.
சொல்வன்மை என்ற அதிகாரத்தில் 'நாநலம்' பற்றிக் குறிப்பிடும் வள்ளுவர்,
'நாநலம் என்னும் நலன் உடைமை அந்நலம்
யா நலத்து உள்ளதூ உம்அன்று' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருக்குக் கல்வி உடைமை, பொருள் உடைமை, அழகுடைமை எல்லாம் நலன்களே! ஆனால் நாநலன் இந்த நலன்கள் எல்லாவற்றையும் விடத் தனிச்சிறப்புடையது.

பூ மலர்ந்திருக்கிறது. அது அழகாக இருக்கிறது. ஆனாலும் அதில் நறுமணம் இல்லை என்றால் அந்தப் பூவைச் சூட எவரும் விரும்பமாட்டார்கள். அது போலத்தான் ஒருவரிடம் பல நூல்களையும் கற்றதனால் அறிவு நிறைந்தாலும், அவரிடம் சொல்வன்மை என்ற நாவன்மை இல்லையானால் அவரது கல்வி அறிவை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள்.

'இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
உணர விரித்துரையாதார்' என்பது குறள்.

ஒரு சமயம் வள்ளுவர் கூறும் நாவன்மையைச் சிறந்த முறையிற் பயன்படுத்தி நிகழவிருந்த ஒரு பெரும் போரை நிறுத்திப் பல உயிர்களை ஒளவையார் காப்பாற்றினார் என வரலாறு கூறுகின்றது.

கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே ஒரு சமயம் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அதியமான் ஒருபோதும் போருக்கு அஞ்சாதவன் ஆனாலும், போரினால் ஏற்படும் அழிவுகளை எண்ணித் தொண்டைமானுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட இருந்த போரை நிறுத்த விரும்பினான்.

இதற்குத் தூதுவராக நல்ல பேச்சாற்றல் வாய்ந்த புலவர் ஒருவரை அனுப்புவது பொருத்தம் என்று எண்ணினான்.

நல்லுள்ளமும் தமிழ்ப்பற்றும், தமிழ் இனப்பற்றும், சொல்வன்மையும் கொண்ட ஒளவையார் அனது நினைவுக்கு வந்தார்.

ஒளவையாரிடம் தனது சமாதான விருப்பத்தைத் தெரிவித்தான். போரை விரும்பாத ஒளவையாருக்கு அதியமானின் கருத்து நிலைப்பாடு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. எனவே ஒளவையார் உடனே தொண்டைமானிடம் புறப்பட்டுச் சென்றார்.

தமிழறிந்த தொண்டைமான் தமிழ்ப் புலவராகிய ஒளவையாரை வரவேற்று விருந்து உபசாரம் நடத்தினான்.

ஒளவையாருக்குத் தன் படைக்கலங்களைக் காட்டி ஒளவையார் ஊடாகப் போர் ஆற்றலை அதியமானுக்குப் புலப்படுத்தலாம் என்று தொண்டைமான் எண்ணினான்.

ஒளவையாரைத் தனது படைக்கலக் கொட்டிலுக்குக் கூட்டிச் சென்று படைக்கலங்களைக் காட்டி 'அம்மையீர்! எப்படி என் படைக்கலங்கள்?' என்று கேட்டான். அதற்கு ஒளவையார், இந்தப் படைக்கலங்கள் பீலி அணிந்து, 'மாலை சூட்டி, நெய் பூசப்பட்டு அழகாக உள்ளன. ஆனால் அதியமானுடைய படைக்கலங்களோ கூர் மழுங்கி, முனைகள் முறிந்து கைப்பிடிகள் தம் நிலை தளர்ந்து மீண்டும் திருத்துவதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் உள்ளன' என்றார்.

விவேகியாகிய தொண்டைமான், அதியமானின் படைக்கலங்கள் பல போர்க்களங்களைக் கண்டு சேதமுற்று இருப்பதையும், தன் படைக்கலங்கள் போர்க்களங்களைக் காணாமையால் புதிதாக இருப்பதையும் கூறிய ஒளவையார் மூலம் தன் பகைவனாகிய அதியமானைப் போரில் வெல்வது அரிது என்பதைப் புரிந்து கொண்டான்.

சமாதானமே இரு பகுதிக்கும் நன்மை அளிக்கவல்லது என்றும் அறிந்து கொண்டான்.
ஒளவையாரின் சொல் வன்மையை வெளிப்படுத்தும் அந்த இனிய பாடல் என்றும் ரசனைக்கு உரியதொன்றாகும்.

'இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டி
கண்திரள் கோன் காழ்திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன்நகரல்லவே அவ்வே
பகைவர்க் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றிலமாதோ!'
என்று தொடர்கிறது.

உதயன் 27.9.2009

No comments:

Post a Comment