Thursday, March 14, 2013

பாவேந்தர் பாரதிதாசனுடன் முதற் சந்திப்பு



அப்பொழுது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன். அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தமிழக அறிஞர்கள் பலரும் வந்து தங்குவதுண்டு.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த பன்மொழிப் புலவர் தேவநேயப் பாவாணர் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.


பாவேந்தர் பாரதிதாசன் தேவநேயப் பாவாணரின் நெருங்கிய நண்பர். தனித்தமிழ்க் கொள்கை உடைய இருவரும் நண்பர்களாக இருந்தது வியப்பன்று. பாரதிதாசன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரும்போதெல்லாம் தேவநேயப் பாவாணரின் அறையிலேயே தங்குவார்.

பாண்டிச் சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பாரதிதாசன் தேவநேயப் பாவாணரின் அறையில் இருப்பதை எனக்குத் தெரிவித்தார்.

பாரதிதாசனின் கவிதைகள் பலவற்றை முன்னரே படித்துச் சிலவற்றை மனப்பாடம் செய்திருந்த எனக்கு அவரைக் காணவேண்டும் என்ற ஆவல் நெஞ்சில் நிலைத்திருந்தது.

நான் உடனே தேவநேயப் பாவாணரின் அறைக்குச் சென்று பாரதிதாசனைச் சந்தித்து வணக்கம் தெரிவித்தேன். என்னைப் பற்றி அவர் வினாவியபோது நான் ஈழநாட்டு மாணவன் என்பதையும் புலவர் வகுப்பிற் படிப்பதையும் கூறினேன். அத்துடன் கவிதைகள் எழுதுகிறவன் என்பதையும் கூறினேன்.
தமிழை உயிராகக் கொண்ட பாரதிதாசனுக்கு நான் புலவர் வகுப்பிற் படிப்பதாகக் கூறியதும், கவிதை எழுதுவதாகக் கூறியதும் பெரு மகிழ்வை ஏற்படுத்தின.

பாரதிதாசன் கருத்து வேற்றுமை கொண்டவர்களிடம் சீறிப் பாய்பவராக இருந்தபோதும் மாணவர்களிடம் பழகும்போது அன்பு உள்ளம் கொண்ட தாய் போலப் பழகுபவராக இருந்தார்.

கவிதை எழுதுவது பற்றி எனது கேள்விகளுக்கு அன்புடன் விளக்கம் தந்தார். தனித்தமிழ் கொள்கையுடைய அவரிடம், 'கவிதைகளில் வட மொழிச் சொல் கலக்கலாமா?' என நான் கேட்டேன். அதற்கு அவர், 'வலிந்து வடமொழிச் சொற்களைத் தமிழிற் புகுத்தக்கூடாது. ஆனாலும் இயல்பாகக் கலக்கின்ற வடமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை' என்று கூறினார். அவர் கவிதைகளில் வடமொழிச் சொற்கள் இடையிடையே கலந்து ஒலிநயம் சேர்ப்பதைக் காணலாம்.

பாரதிதாசன் அவர்களுடனான முதற் சந்திப்பின் நிறைவில் அவரது கையெழுத்துக்காக ஓட்டோகிராபை நீட்டினேன்.

'தமிழ் வாழ்ந்தால் தான் தமிழன் வாழமுடியும்' என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

தினக்குரல், 10.5.2009

No comments:

Post a Comment