Thursday, March 14, 2013

பேராசிரியர் சு. வித்தியானந்தனுடன் கண்ட செவ்வி



கேள்வி : நாட்டுக்கூத்தில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்போது? எப்படி?

பதில் : 1956ம் ஆண்டு நான் 'கலாசார அமைச்சின் தமிழ் நாடகக் குழு'வின் தலைவராக நியமிக்கப்பட்டேன். அக் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நாட்டுக்கூத்து மரபை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
கேள்வி : நாட்டுக்கூத்தை நவீனமயப்படுத்தி மேடையிடுவதில் பெருவெற்றி கண்டிருக்கிறீர்கள். கர்ணன் போர், இராவணேஸ்வரன் முதலிய நாடகங்கள் பெருவெற்றி ஈட்டி உங்களுகு;குப் பெருமை சேர்த்துள்ளன. நாட்டுக்கூத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு ஏற்பட்டது?

பதில் : மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட நாட்டுக்கூத்துக்களில் சில குறைபாடுகள் காணப்பட்டன. இவை இரவிரவாக நடைபெற்றன. மக்கள் சிறந்த நடிகர்களின் பாட்டையும் நடிப்பையும் மட்டுமே ரசித்தார்கள். ஏனைய நடிகர்களின் காட்சிகள் வரும்போதெல்லாம் தூங்கினார்கள். அவர்களால் ரசிக்கமுடியவில்லை. இதனால் நாட்டுக் கூத்தின் நாடகப் பண்பு குறைபாடு உடையதாகக் காணப்பட்டது.
கேள்வி : குறைபாடுகளை நீக்கத் தாங்கள் மேற்கொண்ட உத்திகள்?

பதில் : இரவிரவாக நடைபெற்ற நாட்டுக்கூத்தை ஒன்றரை மணித்தியாலத்துக்குச் சுருக்கினோம். அத்துடன் வேறு பல மாற்றங்களையும் செய்தோம். முன்பெல்லாம் அண்ணாவியாரின் மத்தள அடி நடிகரின் குரலை அமுக்கியது. நாடகமேடையிலும் ஒழுங்கு காணப்படவில்லை. நடிகர்களின் உடையலங்காரத்திலும் தோற்றத்திலும் பல முறைகள் காணப்பட்டன. எனவே இக் குறைகளை நிவர்த்தி செய்து நவீனமயப்படுத்தி மக்களைச் சுவைக்கச் செய்தோம்.
கேள்வி : பல்கலைக் கழக மாணவருக்கும் நாட்டுக்கூத்துக்கும் ஏற்பட்ட தொடர்பு பற்றி....

பதில் : பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு நாட்டுக்கூத்தைத் தயாரித்தோம். இதற்கென அண்ணாவிமார் தெரிவு நடைபெற்று, வந்தாறுமூலை அண்ணாவியார் செல்லையா தெரிவு செய்யப்பட்டார். பத்துக்கிழமைப் பயிற்சியின் பின் நாடகங்கள் மேடையிடப்பட்டன. ஒன்றரை மணிநேரமே நடைபெற்ற இந்நாடகங்களை மக்கள் நன்கு ரசித்தார்கள்.

கேள்வி : மேடை அமைப்பில் தாங்கள் செய்த புதுமைகள்?

பதில் : கறுப்புத் திரைப்பின்னணி அமைப்பில் நாடகம் தொடர்ந்து நடந்தது. காட்சி மாற்றங்களையும் நாடக மரபுகளையும் மத்தளம் மூலமும் ஏனைய இசைக்கருவிகள் மூலமும் உணரவைத்தோம். இதனால் முதலில் இருந்து கடைசிவரை எதுவகை ரசனைச் சோர்வோ, காட்சி அமைப்புத் தடங்கலோ இல்லாமற் நாடகம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
கர்ணன்போர் வடமோடி நாடகம். இதனைத் தொடர்ந்து நொண்டி நாடகமாகிய தென்மோடி நாடகத்தை மேடையேற்றினோம்.
என்னைப் பொறுத்தவரை இது கர்ணன் போரிலும் முக்கியம் வாய்ந்ததாகவும் புதிய மெருகூட்டப்பட்டதாகவும் இடம்பெற்றது.
கேள்வி : இவற்றுக்குப் பின் தாங்கள் மேடையிட்ட நாட்டுக்கூத்து?

பதில் : இவற்றுக்குப் பின் இராவணேஸ்வரனை மேடை யேற்றினோம். இந்த நாடகம் முழுவதும் புதிதாக எழுதப்பட்டது. இராவணேஸ்வரன் நாடகம் இராவணனைச் சிறந்த வீரனாக அவன் குண இயல்புகளை விளக்குவதாக அமைந்தது. இந்த நாடகம் பேராதனை, கண்டி, கொழும்பு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இன்று நாட்டுக்கூத்து வலுப்பெற்று வளர்ந்துள்ளது. பெண்கள் ஆண் வேஷம் போட்டு நடிக்குமளவிற்கு இக்கலை மட்டக்களப்பில் பிரபல்யம் பெற்றுவிட்டது.
கேள்வி : பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் நாடகம் எழுதுவதன் மூலமும் தயாரிப்பதன் மூலமும் ஆற்றிய பணிகள் பற்றி....

பதில் : பேராசிரியர் கணபதிப்பிள்ளை உயர்பதவி பெற்றிருந்தாலும் அடிமட்டத்தில் பொதுமக்களின் பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அதனால் அன்றைய சமுதாயத்தில் நிலவிய சமூகப் பிரச்சினைகள் பற்றி நாடகம் எழுதினார். அவர் மேல்நாட்டில் இருந்தபோது, பேச்சுத்தமிழ், இலக்கியத்தில் பெறவேண்டிய முக்கியத்துவத்தினை அறிந்திருந்தார். அதனால் அவர் லண்டனிலிருந்து திரும்பி வந்ததும் சமூக நாடகங்களைப் பேச்சுத் தமிழில் அமைத்தார்.இவை 1944ம் ஆண்டுக்கு முன் கொழும்புத் தமி;ச் சங்கத்தின் மூலம் அரங்கேற்றப்பட்டன.
நான் 1946ம் ஆண்டு பல்கலைக்கழக விரிவுரையாளரானேன். அக்காலத்தில் இப்சனின் 'நிழல்கள்' நாடகத்தை தயாரித்து மேடையேற்றினேன்.அந் நாடகத்தில் அப்பொழுது எனது மாணவராயிருந்தவரும் இன்றைய தமிழர் கூட்டணிச் செயலாளர் நாயகமுமாகிய அ. அமிர்தலிங்கம் நடித்துப் புகழை உண்டாக்கினார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடங்களில் ஒன்றாகிய 'பொருளோ பொருள்' என்ற நாடகத்தை மேடையேற்றினேன். பின்னர் பேராசிரியரின் வரலாற்று நாடகமாகிய 'சங்கிலி' மேடையேற்றப்பட்டது.
1952ம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகப் பீடம் பேராதனைக்கு மாற்றப்பட்டதும் பேராசிரியரின் நாடகமாகிய 'உடையார் மிடுக்கு' மேடையேறிற்று. அப்பொழுது மாணவர்களா இருந்த க. கைலாசபதி, கா. சிவத்தம்பி பிரதான பாகங்கள் ஏற்று நடித்தனர். பின் பேராசிரியரின் 'சுந்தரம் எங்கே?', 'துரோகிகள்', 'தவறான எண்ணம்' ஆகிய புதிய நாடகங்கள் பேராதனை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு போன்ற இடங்களிலும் மேடையேற்றப்பட்டன. இந் நாடங்களில் பேராசிரியர் கையாண்ட பொதுமக்கள் பேச்சுத்தமிழ் மேனாட்டு அறிஞர்களும் தமிழ்ப் பேச்சுவழக்கை ஆராய உரிய களமாய் உதவியது. இன்று பேச்சுத்தமிழில் மேடையிடப்படும் தமிழ் நாடகங்களின் 'சாம்பார் மொழி' வழக்கிற்கும் பேராசிரியரின் பேச்சுமொழி வழக்கிற்கும் நீண்டதூர இடைவெளி உண்டு.
கேள்வி : உடுக்குப் பாட்டு, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம்.....

பதில் : எமது மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வருவது உடுக்குப்பாட்டு. இன்றும் அளவெட்டி இசைக்கலைஞர் சிதம்பரப்பிள்ளை வயது முதிர்ந்த நிலையிலும் இக்கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு இதனை வளர்த்து வருகிறார். இக்கலை மக்கள் சமய வழிபாட்டோடு இணைந்து வளர்ந்து வருகின்றது. இக் கலையில் ஈடுபடும் இசைக்கலைஞர்களை ஊக்குவது நமது கடமையாகும்.
வில்லுப்பாட்டு அண்மைக் காலத்திலே பலராலும் பேணப்பட்டு வருகிறது. ஆனால் இக்கலையை வளர்ப்பவர்கள் சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு அப்பால் மக்களைக் கவரவேண்டும் என்னும் ஆர்வத்தால் சில விகடத் துணுக்குகளைச் சேர்த்துக் கொள்கின்றனர்.
வில்லுப்பாட்டுச் சமய உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கவும் சமுதாயப் பிரச்சினையை வெளிக்கொணரவும் பயன்படுகின்றது. இதே போலத்தான் கதாகாலட்சேபமும் பயன்படுகிறது.
ஈழநாடு 19-10-1986

No comments:

Post a Comment