Thursday, March 14, 2013

தமிழ்மலை பண்டிதமணியுடன் முதற் சந்திப்பு



பண்டிதமணி அப்போது புகழின் உச்சியிலிருந்தார். அவரது சிந்தனைத் திறனும் பேச்சாற்றலும் அவருக்குப் புகழ் சேர்த்தன. அவரது எழுத்தாற்றல் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

ஈழத்தின் பிரபல வார இதழ்களை அவரது கட்டுரைகள் அலங்கரித்தன. தமிழ் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்த கலைமகள் இதழில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்தன.


அப்போது நான் மகாஜனக் கல்லூரி மாணவன். பண்டிதமணி எழுதிய 'பரீட்சை எடாத பண்டிதர்' என்ற கட்டுரை எங்கள் பாடநூலில் இடம்பெற்றிருந்தது. அக் கட்டுரையைப் படித்த எனக்குப் பண்டிதமணியைச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பம் உண்டானது. மாணவனாகிய எனக்குப் பண்டிதமணியைத் தனியே சென்று சந்திக்கும் துணிவு ஏற்படவில்லை.

ஒருநாள் எங்கள் வீட்டிற்குத் தந்தையாரின் இளைய தம்பியாகிய மட்டுவில் வே.நடராசா அவர்கள் வந்திருந்தார். அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன். அவர் அன்றே என்னைப் புலோலியிலுள்ள தனது வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். மறுநாட் காலை பண்டிதமணியிடம் அவரும் நானும் திருநெல்வேலிக்குச் சென்றோம்.

அப்பொழுது பண்டிதமணி அவர்கள் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தார்.

அவருடைய சிவந்த அழகிய தெய்வீக ஒளிவீசும் தோற்றம் எனக்கு மதிப்பை மட்டுமல்ல, பக்தியையும் ஏற்படுத்தியது.

எனது சிறிய தந்தையார் 'இவன் எனது அண்ணரின் மகன் மகாஜனாவில் படிக்கிறான்' என்று அறிமுகம் செய்து வைத்தார்.

மகாஜனாக் கல்லூரி ஆண்டு இதழில் வெளிவந்த எனது கவிதையைப் படித்ததாகச் சொல்லி கவிதையில் ஓசைச் சிறப்பு இருப்பதாகக் கூறி மேலும் எழுதுமாறு தூண்டினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பண்டிதமணியைப் பலமுறை சந்தித்தேன்.

பண்டிதமணி மேடைப்பேச்சுக்கு ஒரு நடை, கட்டுரைக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என வேறுபட்ட நடைகளைக் கையாண்டார். எடுத்துக்கொண்ட விடயத்துக்கு ஏற்றபடி நடையைக் கையாளும் திறமை பண்டிதமணிக்கே சொந்தமானது.

அவரது உரையாடலின்போது தர்மம், நீதி என்ற சொற்கள் அடிக்கடி வரும். அவர் தரும வழியில் வராத பொருளைத் தீண்டமாட்டார். நீதியோடு இணையாத எந்தச் செயலையும் புரியமாட்டார். கற்க-நிற்க என்ற வள்ளுவர் வாக்கில் அசையா நம்பிக்கை கொண்டவர்.

சங்கப் புலவர்களைச் சங்கச் சான்றோர் என்பார்கள். கல்வியையும் வாழ்வையும் இணைத்துக் கொண்டவர்களே சான்றோர்கள்.

பண்டிதமணியின் கல்வியையும் வாழ்வையும் இணைத்துக் கொண்ட சான்றோர் வரிசையில் இடம்பெறுபவர்.

பண்டிதமணியின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இலக்கிய விழாக்கள் பல சிறப்பாக நடைபெற்றன.

அந்த விழாக்களில் கலந்து கொண்ட பண்டிதமணி அவர்கள் ஈழத்துக் கவிஞர்கள், ஈழத்துச் சொற்பொழிவாளர்கள், ஈழத்து சமயப் பெரியோர்கள் பற்றி எல்லாம் சிறப்பாகப் பேசி அவர்களுடைய பெருமையைப் பொதுமக்களும் அறிந்து கொள்ளச் செய்தார்.

தினக்குரல், 17.5.2009

No comments:

Post a Comment