Thursday, March 14, 2013

வாணிதாசனுடன் முதற் சந்திப்பு



பாவேந்தர் பாரதிதாசனின் முதலாவது சிஷ்யன் என்று சுரதாவைச் சொன்னால் இரண்டாவது சிஷ்யனாக வாணிதாசனைச் சொல்லலாம்.

பாரதிதாசனின் ஊராகிய புதுச்சேரியைச் சேர்ந்த வாணிதாசன், பாரதிதாசனிடம் தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள் ஆகிய நூல்களை முறைப்படித்துப் பண்டிதர் தேர்வில் சித்திபெற்றவர். தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

பாரதிதாசனின் இலகு நடையையே பின்பற்றிக் கவிதை எழுதிய அவர் பாரதிதாசனின் அன்புக்குப் பாத்திரமானார்.


இருவரும் அன்புடன் பழகிய போதும் அரசியல் இடையிற் புகுந்து அன்பைச் சிறிது குறைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

திராவிடக் கழகம் இரண்டாகப் பிரிந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. பாரதிதாசனும் வேறு பலரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற் சேராது ஈ.வே.ரா. பெரியாருடனேயே தங்கிவிட்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அறிஞர் அண்ணாவினால் கவரப்பட்ட வாணிதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாறிவிட்டார்.

அரசியலில் வேற்றுமை இருந்தபோதும் வாணிதாசன் குருவாகிய பாரதிதாசனைப் போற்றத் தவறியதில்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கவி அரங்கிற்குத் தலைமை தாங்க அவர் வந்திருந்தார். மாணவர்கள் மத்தியில் அப்போது காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்று இரு பிரிவினர் இருந்தனர். திராவிட முன்னேற்றக் கழக மாணவர்களிற் பலரே கவி அரங்கிற் கலந்து கொண்டனர்.

கவி அரங்கிற்குத் தலைமை வகித்த வாணிதாசன் கவி அரங்கில் கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தமது தலைமைக் கவிதையை வாசித்த முறையிலேயே தெரிவித்தார்.

கவி அரங்கினால் இலக்கிய இரசிகர்களை மெய் மறக்கச் செய்ய முடியும் என்பதை அன்றைய கவி அரங்கு நிரூபித்தது.

கவி அரங்கு முடிந்ததும் மாணவர்கள் அவரை மாணவர் விடுதிக்கு அழைத்துச் சென்று அவருடன் உரையாடி மகிழ்ந்தோம்.

பாரதிதாசனுடன் உரையாடும்போது உள்ளூர ஒரு அச்சம் இருந்து கொண்டிருக்கும். வாணிதாசனுடன் நண்பர்களுடன் உரையாடுவது போல உரையாடலாம். அவர் தமது கவிதை அனுபவம் தி.மு.க. அரசியல் அனுபவம் பற்றி எல்லாம் உரையாடினார்.

கவிதை எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போது நீங்கள் இங்கே யாப்புத் தவறுமற்ற கவிதை இயற்றுங்கள், யாப்பு இலக்கணம் சிலர் நினைப்பது போலக் கவிதை மாளிகைக்குச் சிறை அல்ல. கவிதை மாளிகைக்கு அத்திவாரம் தான் அது. கட்டடத்திற் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அத்திவாரம் அன்றும் இன்றும் என்றும் உறுதியாகவே இருக்கவேண்டும் என்றார்.

தினக்குரல், 7.6.2009

No comments:

Post a Comment