Tuesday, March 12, 2013

முடியாட்சி ஆனாலும் சரி குடியாட்சி ஆனாலும் சரி தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும்

திருக்குறளில் 'வழி நோக்கான்' என்ற சொற்றொடர் வருகிறது. திருக்குறள் சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் கொண்ட ஒப்பற்ற நூல் என்பதை உலகு அறியும்.

இத்தொடர் அரசனுக்கு அறிவு கூறுகிறது. இன்றைய மக்களாட்சித் தலைவர்களுக்கும் பொருத்தமானது.

ஆணவம் கொண்ட அரசன் தர்மத்தின் வழியை நோக்கான். ஐம்பெரும் குழுவும் எண் பேராயமும் சொல்வதையும் ஆணவம் காரணமாக ஆராய மாட்டான். தன் முன்னோர் ஆண்ட வழியையும் நோக்கான்.

அதேபோலத் தான் ஜனநாயக ஆட்சித் தலைவனும் ஆட்சியில் அமர்ந்த பின் தர்மத்தின் வழி நோக்கான். பல வழிகளிலும் பெரியோர் சொல்லும் அறிவுரைகளை ஏற்கமாட்டான். மக்களுக்கும் ஆட்சிக்கும் தருமம் என்ற திசையைக் காட்டும் திசைகாட்டியாக விளங்கும் பத்திரிகைகள் கூறும் நல்லவற்றையும் ஏற்கமாட்டான்.

'வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கினிது'


ஆணவம் கொண்ட அரசன் தர்மத்தின் வழி நோக்கான். தர்மம் கூறுவதைச் செய்யான். அவனிடம் மனிதப் பண்பு இராது. அவன் தனக்கு வரும் வழியை நோக்கமாட்டான். இவனுடைய பகை, பகைவர்க்கு இனிமையாக இருக்கும். ஏனென்றால் இவன் தானே அழிந்துவிடுவான்.

பாஞ்சாலியின் துகிலை உரிய நினைத்தபோதே துரியோதனன் தனக்கு அழிவைத் தேடிக் கொண்டான். தர்மத்தின் வழியையே நோக்கும் தருமரும் தம்பியரும் பெரு வெற்றி காண்கிறார்கள்.

மக்களாட்சியிலும் தாங்கள் பெரும்பான்மையினர் என்ற நிலையில் சிறுபான்மையினரைத் தர்மத்தின் வழி நோக்காது அழிப்பவர்கள் துரியோதனனின் முடிவையே காண்பார்கள்.

நல்ல அரசன் எப்படி இருப்பான் என்பதையும் திருவள்ளுவரே விளக்குகிறார்.
நல்ல அரசன் தர்ம வழியில் ஆட்சி செ ய்வான். அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறியில் நிற்பான். இப்படிப்பட்ட அரசன் பிறப்பால் மனிதன் ஆயினும் செயலால் கடவுளாகக் கருதப்படுவான்.

'முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்'.


இது இன்றைய ஜனநாயக ஆட்சிக்கும் பொருந்தும் இன வேறுபாடு மதவேறுபாடு கருதாமல் எல்லா மக்களையும் நாட்டின் செல்வங்கள் எனக் கருதி நடக்கும் ஆட்சித் தலைவன் தெய்வமாகவே மதிக்கப்படுவான்.

பாண்டியன் ஆட்சியில் வாழ்ந்த வணிகன் ஒருவன் வணிகம் கருதி வெளிநாடு செல்ல நினைத்தான். ஒருநாள் இரவு தன் கருத்தைத் தன் மனைவிக்குத் தெரிவித்தான். அதற்கு அவனுடைய மனைவி -

'உங்கள் துணையில்லாமல் நான் எப்படித் தனிமையில் இரவைக் கழிக்கமுடியும்' என்று அச்சத்துடன் கேட்பார். அதற்கு வணிகன் 'நாம் பாண்டியன் ஆட்சியில் வாழ்கிறோம். இங்கு திருடர் பயமோ கொடியோர் பயமோ இல்லை' என்று துணிந்து நம்பிக்கையுடன் கூறினான்.

அந்த வேளை மாறு வேடத்தில் சென்ற பாண்டியன் செவிகளில் இந்த உரையாடல் கேட்டது. தன் ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை

அவனுக்குப் பேருவகை அளித்தது. மக்கள் தன் ஆட்சி மீது கொண்ட நம்பிக்கை சிறிதும் குறையக்கூடாது என்று கருதிய பாண்டியன் அந்த வணிகன் வெளிநாடு சென்று திரும்பும் வரையில் அவன் வீட்டுக்குக் காவலாளியாக மற்றவர் அறியாதவாறு மாறு வேடத்தில் நின்று காவல் புரிந்தான். அவன் தான் காவலன். அவன் தான் இறைவன்.

அரசருக்கு வேண்டிய தனிச் சிறப்பு மக்கள் யாரும் நினைத்தவுடனே சென்று தமது குறையைக் கூறக்கூடிய எளிய இயல்புடன் இருத்தல் ஆகும். அத்துடன் மக்கள் அஞ்சாமல் அணுகுவதற்குரிய இன் சொல் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

'காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்'


முறை வேண்டிப்போனவர்களுக்கும் குறைவேண்டிப் போனவர்களுக்கும் காண்பதற்கு எளியவனாகவும் அவர்களிடம் இன்சொல் உடையவனாகவும் இருந்தால் அவன் நாட்டை மற்ற நாடுகளிலும் உயர்வாக உலகு மதிக்கும்.

முடியாட்சியாக இருந்தாலும் குடியாட்சியாக இருந்தாலும் ஆட்சியில் தர்மம் இருந்தால் மக்கள் நல்வாழ்வு வாழ்வர். ஆட்சியாளரின் நடுவுநிலைமை இன, மத, பேதம் இல்லாது அமைதியான நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.


உதயன் 13.11.2011

No comments:

Post a Comment