Tuesday, March 12, 2013

இனப்பற்றும் தேசப்பற்றும் மிக்க மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

தேசப்பற்றும் தெய்வப் பற்றும் மொழிப் பற்றும் இனப் பற்றும் மிக்கவர் பாரதியார். தமிழ் இனப் பற்றினால் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் இனத்தின் துன்பம் கண்டு துடிதுடித்தார்.

இன்று பொருள் ஈட்டவென்று நம்மினத்தவர் வெளிநாடு செல்கின்றனர். போருக்கு அஞ்சி வெளிநாடு செல்கின்றனர். ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? அன்று பாரதி காட்டிய தமிழ் இனத்தின் அவலங்கள் இன்றும் தொடர்கின்றனவே.

இன்று ஈழத்திலும் வேறு பல நாடுகளிலும் தமிழ் இனம் படும் அவலத்தைத் தீர்க்கதரிசியாகிய பாரதி பாடிக் கண்ணீர் விடுகிறார்.


'பற்பல தீவினும் பரவி இவ்வெளிய
தமிழ்ச் சாதி தடிஉதை உண்டும்
காலுதை உண்டும் கயிற்றடி உண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலைவுள்ள தம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் என்னுளம் அழிந்திலேன்'


என்று பாடுகிறார்.
தமிழ்ச் சாதி கொடியோரின் தடி அடிக்கு ஆளாகிறது. கால் உதைக்கு ஆளாகிறது. கயிற்றடிக்கு ஆளாகிறது. இதனால் வருந்துகிறது, சாகிறது.
மனைவியைப் பிரிந்த கணவன், கணவனைப் பிரிந்த மனைவி - இவர்களைப் பிரிக்கும் கொடியவர்கள் என்றெல்லாம் கூறுகிறர்.

தமிழினத்தின் அவலங்கள் காலம் மாறினும் மாறாது இருக்கின்றனவே!

தேச விடுதலையில் பாரதியார் பங்கு


பாரததேசம் அடிமைப்பட்டிருந்த காலம். மகாத்மா காந்தி ரஷ்ய ஞானியின் நூல்களைப் படித்தவர். ரஷ்ய ஞானிமேல் பெருமதிப்புக் கொண்டிருந்த மகாத்மா காந்தி ரஷ்ய ஞானி ரோல்ஸ்Nhய்க்குக் கடிதம் எழுதி இந்திய விடுதலைக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டிருந்தார்.

ரோல்வ்ஸ் ரோய் உலகம் ஒப்புக்கொண்ட பெரிய மகான். மகாத்மா காந்தியின் கடிதத்துக்கு நீண்ட பதில் எழுதவில்லை. சுருக்கமாகவே பதில் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் முப்பது கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்திய தேசத்தை ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் அடிமையாக்கி ஆள்வதற்கு என்ன காரணம் என்பதைச் சிந்தித்தால் விடை கிடைக்குமெனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்புதான் மகாத்மா காந்தி இந்தியா சமயத்தாலும், சாதியாலும் இன்னும் பல காரணங்களாலும் சிதறுண்டிருப்பதை அறிந்தார். பிரதேச மக்கள் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள். உடன் பிறப்புக்கள். இந்தப் பிள்ளைகள் சாதி பேதம், சமய பேதம், அனைத்தையும் மறந்து தேச விடுதலைக்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றார்.
மகாத்மா காந்தியின் விடுதலைக் கருத்தை ஏற்றுக் கொண்ட பாரதியார் -


'பாரத தேசம் பழம்பெரும் தேசம்
நீரதன் புதல்வர் நினைவகற்றாதீர்'
என்று பாடினார்.


இந்திய மக்கள் அனைவரும் இந்தியாவின் புதல்வர்களே. தாயின் அடிமை விலங்கு ஒடிக்கப் பிள்ளைகள் ஒன்றுபடவேண்டும் என்று கூறினார்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு'
என்று பாடினார்.


தேச விடுதலைக்கு இந்திய மக்களை ஒன்றுபடுத்திய பணியில் பாரதியாருக்கும் பெரும் பங்கு உண்டு.

ஊர்கூடித் தேர் இழுத்தல்


ஊர் மக்களிடையே கருத்து வேற்றுமை இருக்கலாம், தனிப்பட்ட பகை கூட இருக்கலாம். ஆனால் தேர்த்திருவிழா வரும்போது தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்ற ஒன்றுபட்ட நல்லெண்ணத்துடனேயே போவார்கள்.

ஒரே திசை நோக்கி ஒரே பக்தி உள்ளத்துடன் தேரை இழுப்பார்கள். நெடும் தேர் கூட இலகுவாக இழுபடும். திருவிழா சிற்பபாக நிறைவுறும்.
இந்திய தேசமும் நெடுந்தேராகப் பாரதியார் கண்களுக்குத் தெரிகிறது. முப்பது கோடி மக்களும் சுதந்திர தேவியைத் தேரில் ஏற்றி ஒன்றுபட்டு இழுத்தால் சுதந்திரம் என்கிற இந்திய தேச தேர்த்திருவிழா விரைந்து நிறைவுறும் என்று கூறுகிறார்.

இந்தப் பணி எப்படி நிறைவேற வேண்டும். இதனைத் தொடர்ந்து தேச அபிவிருத்திப் பணி எப்படி நிறைவேற வேண்டும் என்பதையும் கூறும் பாரதியார் -


'இன்னறுங்கனிச் சோலைகள்செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்'

என்று கூறி இப்பணிகள் சிறப்புற நிறைவுறவே நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர், ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்.


'மதுரத் தேமொழி மாதர்களெல்லாம்
வாணி பூசைக்குரியன பேசீர்
எதுவும் நல்கி இங்கெவ்வகையானும்
இப்பெரும் தொழில்நாட்டுவம் வாரீர்'
என்கிறார்.


எல்லோரும் தேச விடுதலையிலும் தேச அபிவிருத்தியிலும் ஒன்றுபடவேண்டும். அதற்காக அவரவர் ஆற்றலுக்கேற்ப உழைக்க வேண்டும் என்பது பாரதியாரின் விருப்பம்.


உதயன் 11.9.2011

No comments:

Post a Comment