Tuesday, March 12, 2013

தமிழர் வாழ்வில் காதலிலும் நாகரிகம்

உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி. முதலாவது நாகரிக இனம் தமிழ் இனம். தமிழினத்தின் காதல் வாழ்வும் நாகரிகம் வாய்ந்தது.
காதல் வாழ்வை இருபத்தைந்து அதிகாரங்களில் சொல்லும் திருவள்ளுவர், காமத்துப் பாலின் இரண்டாவது அதிகாரத்தில் குறிப்பு அறிதல் என்றோர் அதிகாரம் வைத்துள்ளார்.
காதலுக்கு ஏற்ற வயதுடைய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது இயல்பானதே!
பறவைகளில் அன்றிலும் புறாவும் விலங்குகளில் யானையும் குறிப்பறிந்தே இணைகின்றன.
ஆனால் நாகரிகத்தில் உயர்ந்து நின்ற தமிழ் இனத்தில் பதவியையும் பொருளையும்காட்டிப் பெற்றோரை மயக்கித் திருமணம் செய்தல், அடியாட்களைக் கொண்டு பெண்ணைக் கடத்தித் திருமணம் செய்தல், பெற்றோரே தமது வசதிக்காகப் பெண்ணை அச்சுறுத்தித் திருமணம் செய்தல் என்பன இடம்பெற்றுவிட்டன.

குறிப்பறிந்து செய்யும் திருமணத்தை ஒளவையார், காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே 'இன்பம்' என்கிறார். குறுந்தொகைப் பாடல், 'அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்கிறது.
எதைக் கூறினும் தனித்துவம் தோன்றக் கூறும் திருவள்ளுவர் குறிப்பறிதலையும் தனித்துவம் தோன்றக் கூறுகிறார்.

'நான் நோக்கும் காலை நிலன் நோக்கும்| நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்' என்கிறார்.

தலைவன், தலைவி பற்றிக் குறிப்பிடும் போது, அவள்தான் நோக்கும் போது நாணத்தால் நிலத்தை நோக்குவாள் என்றும் நோக்காதவிடத்துத் தன்னை நோக்கிப் புன்முறுவல் செய்வாள் என்றும் கூறுகிறான். அந்தப் புன்னகையே அவளுடைய குறிப்பை, சம்மதத்தை அவனுக்குத் தெரிவிக்கிறது. தலைவனும் தலைவியும் அன்புளத்தால் இணைகிறார்கள்.
அன்புளத்தால் இணைந்தவர்கள் நண்பர்களாகவே வாழ்கிறார்கள். திருவள்ளுவர் நட்பைப் பற்றிப் பதினேழு அதிகாரங்களில் அதாவது நூற்று எழுபது குறள்களில் கூறினார். நட்புக்கு அவ்வளவு சிறப்பிடம் கொடுத்த வள்ளுவர், கணவன் - மனைவி உறவையும் நட்பு என்றே குறிப்பிடுகிறார்.

'உடம்பொடு உயிரிடை என்ன, மற்றன்ன
மடந்தை யொடெம்முடை நட்பு'

என்கிறார்.
உடம்புக்கும் உயிருக்கும் உள்ளது போன்றது மடந்தைக்கும் எனக்கும் உள்ள நட்பு என்கிறான் கணவன். இங்கே கணவனும் மனைவியும் சமம். ஒருவர் பெரியவரும் இல்லை. மற்றவர் சிறியவரும் இல்லை. குறிப்பறிந்து திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள், வாழ்வு முழுவதுமே குறிப்பறிந்து நடப்பார்கள்.
கணவனுக்கு வறுமை வந்தாலும் மனைவி வறுமையைத் தாங்கிக் கணவனைப் பேணிக் கொள்வாள். மனைவிக்கு நோய் வந்தாலும் கணவன், மனைவியை இன்சொல்லால் மகிழ்வித்து நோயைத் தாங்கி மனைவிக்கு உதவியாக இருப்பான். இத்தகைய கணவன் மனைவிக்கு நட்பு என்ற சொல்லை பொருத்தமான சொல் என்று கண்டு கூறிய வள்ளுவர் சிந்தனையாளரே!
இந்த உலகில் காதலித்த எல்லோரும் சேர்ந்த வாழ்கிறார்களா? அவர்களே விவாகரத்துப் பெற்றுக் கொள்வதில்லையா? என்று சிலர் கேட்கலாம். அவர்கள் காதல் என்ற போர்வையில் வாழ்பவர்களே அல்லாமல் காதலர்கள் அல்லர்.
செம்புலப்பெயர்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று சிறப்பிக்கிறது சங்க இலக்கியம். வானிலிருந்து வந்த மழை நீரும் செம்மை வாய்ந்த நிலமும் ஒன்றாகச் சேர்ந்து தனித்துவம் பெறுவது போல எங்கோ பிறந்த தலைவனும் எங்கோ பிறந்த தலைவியும் அன்பினால் ஒன்றாகித் தனித்துவம் பெறுகிறார்கள்.
காதலர் என்று பலர் உலகில் இருந்தாலும் சிலர் தான் காதலர்களாக வாழ்கிறார்கள் என்பதை வள்ளுவர் பெருமான், சிலர் காதலின் செவ்வி தலைப்படுவார் என்கிறார்.

'மலரினும் மெல்லிது காமம்| சிலர் அதன்
செவ்வி தலைப் படுவார்' என்கிறார்.

காதல் இன்பம் மலரினும் மென்மையானதாக இருக்கும் என்றும் இந்த உலகிற் சிலரே அந்த இன்பத்தை நுகர்வார்கள் என்றும் கூறுகின்றார்.
மென்மையான உள்ளம் - அன்புள்ளம் - தியாக உள்ளம் கொண்டவர்களே திருவள்ளுவர் சொல்லும் அந்தச் சிலர் ஆவார்.
குறிப்பறிதல் இன்றிப் பெற்றோர் நிர்ப்பந்தத்துக்காகவோ, வறுமையின் நிர்ப்பந்தத்துக்காகவோ நிகழும் திருமணங்களில் மலரினும் மென்மையான காதலை எவ்வாறு காணமுடியும்?
குறிப்பறிவதற்குக் கண்ணும் அது நோக்கும் நோக்கமும் இன்றியமையாதன. தலைவியின் கண்ணில் இரு நோக்கினைக் கண்டான் தலைவன். ஒரு நோக்கு இந்தப் பேரழகு எனக்குக் கிடைக்குமா என்ற துன்பத்தைச் செய்தது. ஆனால் இரண்டாவது நோக்கு அவளுடைய சம்மதத்தை அன்பைப் புலப்படுத்தி இந்தப் பேரழகு உனக்கே சொந்தம் என்று புலப்படுத்தி துன்ப நோக்கிற்கு மருந்தாக அமைந்தது.
குறிப்பறிதல் தலைவன் தலைவிக்குச் சிறப்பானது. ஆனால் எல்லோர்க்கும் பொதுவானது. குறிப்பறிதலின் நுணுக்கம் பற்றியே திருவள்ளுவர் பொருட்பாலில் குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரத்தையும் காமத்துப் பாலில் குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரத்தையும் வைத்தார்.
பொருட்பாலில் வரும் குறிப்பறிதல் அரசனுக்கு உதவியாக உள்ளவர்கள் அரசனின் குறிப்பறிந்து நடப்பதைக் கூறும்.
குறிப்பறியும் இயல்பு அரசனுக்கு உதவியாவோர்க்கும் தலைவன் - தலைவிக்கு மட்டும் இருந்தால் போதுமா? எல்லோர்க்கும் வேண்டியதே!
பசித்துவருவோரின் குறிப்பறிந்து உணவு கொடுக்கும் குடும்பத்தவர், ஒருவரின் வறுமையைக் குறிப்பால் அறிந்து நீக்கும் உறவினர்கள், மக்கள் குறிப்பறிந்து நடக்கும் ஜனநாயகத் தலைவர்கள் எல்லோரும் போற்றுதற்குரியவரே.
உதயன் 21.10.2011

No comments:

Post a Comment