Sunday, March 10, 2013

இலுப்பைமர நிழலின்கீழ்...

மாவை எனும் எழில் விளைக்கும் அழகார்ந்த பதியில்
மனங்கவர வளர்ந்துநின்ற திலுப்பை மரம் ஒன்றே!
யாவரையும் கவர்கின்ற கிளைகள் பல கொண்ட
யாவர்க்கும் பயன்நல்கிச் செழித்து நின்ற தங்கே!

உலகத்துப் பறவையெலாம் அங்குவந்து சேரும்
உவப்புடனே பழத்தைத்தான் புசித்துப்பின் பாடும்
நலம் விளைக்கும் இளம்தென்றல் நற்சுகமே விளைக்கும்
இயற்கை நல்கும் எழிற்செல்வம் செழித்துநிற்கும் அங்கே!

சிறுமியர்கள் மணல்வீடு கட்டி மகிழ்வார்கள்
சிறுவர் சிலர் அயலினிலே பந்தாடி மகிழ்வர்
சிறுவர் சிலர் அயலினிலே ஆடுகின்ற பந்து
சிலவேளை உருண்டோடித் தொலைந்துவிடல் உண்டு.

மாவையெனும் பதியிலே அப்போது வாழ்ந்தோர்
மகிழ்வுதரும் உறவினரே பிரச்சினைகள் இல்லை
பாவையர்கள் சுடச்சுடத் தாம் சமைத்திட்ட உணவை
பற்றுடனே மரநிழலில் பகிர்ந்துண்டு மகிழ்வார்!

இலுப்பைமரம் என்றதனை ஒரு சொல்லில் சொன்னேன்
இல்லையது மரம் அல்லத்தெய்வம் எனல் தகுமே
நலம்படைத்த இலுப்பைமரக் காற்றளிக்கும் சுகத்தால்
நாளுமெங்கள் நலம் காக்கும் மருத்துவரும் ஆகும்.

ஒருகாலம் இலுப்பை மரம் பூத்துநிற்கும் காற்றில்
உவப்புடனே வாசனையைப் பரப்பி நிற்கும் பெரிதும்
ஒருகாலம் இலுப்பைமரம் இனியபழம் வழங்கும்
உண்பதற்குப் பறவையினம் ஒன்றுபட்டே கூடும்

முதியோர்கள் இலுப்பை யதன் விதைநல்கும் எண்ணெய்
முன்னோர்தம் கருத்தேபோல் தேடிமகிழ்ந் தெடுப்பர்
புதியவரும் இலுப்பை விதை சேகரித்துக் கொள்வார்
பொருள் மருந்தாம் பலவாறாய் பயன்விளையும் காண்பார்

தாயவரும் இலுப்பை மர நீழலதன் கீழே
தள்ளாடி நடைபயிலத் தம்சேயை விடுப்பார்
சேயரது நடை பார்த்துச் சிரித்து மிகமகிழ்வார்
சிந்திக்கின் இலுப்பை மரநிழலும் தான் மருந்தே!

பறவைகளோ எப்போதும் அதன் கிளையில் தங்கும்
பற்றுடனே கதைகள் பலபேசி நிதம்மகிழும்
பறவைகளின் அழகுகண்டு ரசிப்பாரே அன்றி
பண்பின்றி அவற்றைக் கொன்றுண்பவர்கள் இல்லை!

அம்மரத்தின் நீழலிலே சிலகாலம் தன்னில்
ஆருமற்ற தனிமைவந்து சேருதலுண்டு
வந்த அந்த ஒருநாளில் பேரழகு ஒருத்தி
வந்து சிலவேளைகளில் தனித்தமர்ந்து கொள்வாள்.

ஆரும் இல்லாதொரு வேளையில் மதியம்
சீரிய இலுப்பையின் பாரியவேரில்
வந்தோர் இளம்பெண் தனிமையில் இருப்பாள்
அந்தப் பேரெழில் அழகியின் முகமோ

புன்னகை துறந்து ஆண்டுகள் சிலவாய்
தன்நடை தளர்ந்து தனிமையில் அழுவாள்
கண்ணீர் வடியவே அழகுக் கன்னம்
வண்ணம் குலைந்தது வாழ்வெலாம்
அப்பெண் யாரென அறியேன் ஆயினும்
செப்புதற் கொன்றே அறிவேன் புகல்வேன்

மிக இளம்வயதில் திருமணம் புரிந்து
சக உறவணைக்க சந்தோசமாக
கணவன் வீடு சென்றவள் சிலநாள்
மணவினை சிறக்கச் சென்றொரு சிலநாள்
செல்லுமுன் இல்லறம் சிறக்கப் பெறாளாய்
நல்லறம் காணா நாயகியாகி
தாய்மடியைத் தேடி வந்தனள்
சேயின் மனத்திற் காறுதல் தந்தனள்
கருணை வடிவாம் அவளின் தாயோ
இரு என்னுடன் எனப் புகலிடம் ஆனவள்
எங்கும் செல்லாள் எவரொடும் கதையாள்
தங்கியே தாயொடு இருந்து மயங்கினள்
தாயார் வீட்டில் இல்லா நேரம்
போயவ் வினிய நிழல் தரும் மரமாம்
இலுப்பையின் வேரில் இருந்தே அழுவாள்

அவளை மணந்தோன் கொடியன் என்றும்
அன்பே இல்லா நெஞ்சினன் என்றும்
பின்னர் மெல்லநான் தெரிந்தேன் துவண்டேன்
புதுமணப் பெண்ணை நடத்தும் முறையைக்

காதல் உள்ளம் உடையரே அறிவார்
மலரினும் மெல்லிய காதலின் மென்மை
சிலர்க்கே தெரியும் அவர்க்கே இல்லறம்.
ரோஜாச் செடியில் ஓர்கிளை வெட்டி
வேறோர் இடத்தில் நடுதல் வேண்டின்
செடியினை விட்டே ஓர்கிளை தன்னை
வளைத்து மண்ணால் மூடுதல் வேண்டும்
பலநாட் சென்ற பின் மண்ணிற் புதைந்த
பகுதியில் புதுவேர் தோன்றும் கிளையோ
மண்ணில் தன் உணவைத் தாய்ச் செடி இன்றித்

தானே பெற்றிடும் வலிமையை எய்தும்
அந்நேரத்தே ரோஜாக் கிளையை
மென்கூர் கத்தியால் வெட்டியே மெல்ல
வேறோர் இடத்தில் நடுவராயினும்
செடிதான் வளர்ந்தே மலரினை நல்கும்
புதுமணப் பெண்ணும் ரோஜாக்கிளைதான்
தாயிடமிருந்த பாசவேர் மெல்ல
வேறோர் இடத்தில் வலிமைபெற்றதும்

தாயைப் பிரிந்து சென்றோர் குடும்பமாய்
வாழும் இயல்பைப் பெற்று விடுவாள்
அவசரப்பட்டால் ரோஜாச் செடிபோல்
அவளும் வாழ்வில் சிதைந்தே விடுவாள்
இந்தப் பெண்ணும் ரோஜாக் கிளையே.

இவள் துணையானோன் கல் நெஞ்சதனில்
இக்கிளை வேர்விடல் இயலாது போகத்
தாயின் வீடு நாடி வந்தது
எந்த நிலையிலும் வெறுக்கா ஒருத்தி

தாய்! தாய்! அதனால் தாயே தெய்வம்
கணவனைப் பிரிந்த பெண்கட்கெல்லாம்
தாயே தெய்வம் வீடே கோயில்
இதுவே அப்பெண்ணின் விவரம் ஆகும்.

அவளின் கண்ணீர் அவளது துயரம்
இலுப்பை மரமே முற்றிலும் அறியும்
சிறுமியாய் ஓடி ஆடிய நாள்கள்
வளர்ந்து சிறுகதை படித்த நாள்கள்

கற்பனை ஆயிரம் மனத்தில் படைத்த
கற்பனை வாழ்வில் மகிழ்ந்த நாள்கள்
அனைத்தும் அந்த இலுப்பை அறியும்
அதனால் இலுப்பையும் அவட்குத் தாயே

அவளது கண்ணீர் அவளது துயரம்
அறிந்த இலுப்பையை நிகழ்ந்த போரினால்
பார்க்கும் வாய்ப்பை இழந்தே இருந்தேன்
போர் முடிவுற்றதாய் அரசின் கூற்றைக்

கூறக் கேட்டே இலுப்பையைப் பார்க்கும்
ஆவலில் ஓடினேன் இலுப்பை அங்கில்லை
போர்க் காலத்தே வீட்டின் கதவையும்
மரத்தையும் தறித்து விறகாக்கியவர்

இலுப்பையை விடுவரோ? இலுப்பையை விடுவரோ?
மக்களைக் கொல்வோர் இலுப்பையைத் தறிக்க
மிக்க தாமதம் ஆகுமோ சொல்வீர் ஆரோ

இலுப்பையைத் தறித்தே சென்றர் ஆரோ
இலுப்பை இல்லை, ஆனால் அந்த
ஆரோ இன்னும் இருக்கிறார்களே!

No comments:

Post a Comment