Sunday, March 10, 2013

பண்டிதமணி வாழ்வும் பணியும்

தண்டமிழிற் பற்றுடையார் சித்தாந்தத்தின்
சாகரமாம் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட
கண்டவரைக் கவர்கின்ற பொலிவு கொண்ட
கருணைமொழி இருவிழிகள் இயல்பிற் பெற்றார்.

அக்கால அறிஞரெலாம் இவரைக் கண்டால்
'ஐயா!' என்றழைப்பார்கள்| அடக்கம் மிக்கார்
எக்காலமும் ஒலிக்கும் மணியே ஆனார்
இவ்வுலகம் பண்டிதமாமணி என்றோதும்

நெல்விளைக்கும் சிறப்பமைந்த பதியே ஆய
நீடுபுகழ் மட்டுவிலிற் பிறந்தார் அன்புச்
சொல்விளைக்கும் குடும்பத்தில் சின்னத்தம்பி
வள்ளியம்மை தம்பதியின் மகனே ஆக

செய்தவத்தின் பயனாக இவர் பிறந்தார்
செழுந்தமிழை வளர்க்கவென இவர் பிறந்தார்
மெய்ந்நெறியில் வாழவென இவர் பிறந்தார்
மேவு சைவம் போற்றஎன இவர் பிறந்தார்.

நூற்கடலாம் வேற்பிள்ளை வாழ்ந்த காலம்
திருஞானசம்பந்தர் திகழ்ந்த காலம்
ஆற்றல் சேர்மகாலிங்கசிவம் என்கின்ற
அருங்கலைஞர் தாமுமங்கே வாழ்ந்த காலம்

பிறக்கையிலே கொண்டுவந்த அறிவும் பெற்றார்
பெரியவர்கள் கற்பிக்கும் பேறும் பெற்றார்
திறத்தினிலே செவிச் செல்வம் தானும் பெற்றார்
சிறந்த புகழ் இளமையிலே வாய்க்கப் பெற்றார்.

ஆங்கிலமும் தீந்தமிழும் ஆற்றல் வாய்ந்த
அருமொழியாம் வடமொழியும் கற்றுத் தேர்ந்த
ஓங்குபுகழ் நாவலர்தம் பாடசாலை
உவப்புடனே சென்றேதான் மேலும் கற்றார்

சுன்னாகம் குமாரசாமிப் புலவர் என்றே
தொல்லுலகம் போற்றுகின்ற பெரியாரின் பால்
நன்னூல் தொல்காப்பியமாம் நூல்கள் கற்றார்
நயந்துலக இலக்கியங்கள் தாமும் கற்றார்

பண்டிதர்க்கே வேண்டியதாம் தகுதி பெற்றார்
பரீட்சையிலும் தேர்ச்சிபெற ஆவல் கொண்டார்
தொண்டு செயும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தேர்வில்
தோற்றியே பண்டிதராம் பட்டம் பெற்றார்.

மேடைதொறும் இலக்கியத்தைப் பரப்பலானார்
மேவு சைவப் பிரசங்கம் நிகழ்த்தலானார்
ஈடில் பெரும்புகழுக்கே ஆளுமானார்
பண்டிதமாமணி யெனவே வியந்தார் யாரும்

மிகச் சுவையாய் விளங்கியதாம் அவருடைய பேச்சில்
மேவுகின்ற கருத்துமணி எங்கெங்கும் தோன்றும்
நகைச்சுவையின் சிறப்பதனைக் கேட்டவர்கள் அறிவார்
நாடுவார் பின்னுபவர் பேச்சதனைக் கேட்க
சிந்தனைக்கோர் அறிஞர் இவர் என்றுழைத்து மகிழ்வார்
தேன்தோய்ந்த சொல்லாட்சி என்னுள்ளம் நெகிழ்வர்
வந்தனைக்கே உரியர் இவர் சொற்பொழிவு தன்னை
வாருங்கள்! வாருங்கள்! கேட்டிடுவோம் என்பார்

ஈழத்துப் பேரறிஞர் இவர் பேச்சைக் கேட்டே
இதுவன்றோ சொற்பொழிவு வென்றுள்ளமெல்லாம் மகிழ்ந்தார்
நாளுமே தமிழ் வளர்த்த கல்கிஇவர் பேச்சை
நயந்து நயந்தே இவரைப் பாராட்டலானார்

சேதுப்பிள்ளை முதலாம் அறிஞர் பலர் இவர்தம்
சிந்தனையை நகைச்சுவையை மிகப் போற்றலானார்
பேதமின்றி ஈழத்தின் ஏடெல்லாம் இவர்தம்
கட்டுரையைப் பிரசுரித்தே பெருமை அடைந்தனவாம்

தினகரனாம் ஏட்டினிலும் இவர் எழுதலானார்
செம்மைபெறு கேசரியில் தொடர்ந்தெழுதலானார்
மனமுவந்து கலைமகளில் எழுதி வரலானார்
மணியாய கட்டுரைகள் எழுதி மணிஆனார்.

ஆசிரியமணி என்ற இவர்சீடர் இவரின்
அரிய பல கட்டுரையை நூலுருவில் ஆக்கி
நேசமுடன் வெளியிட்டே இவர் எழுத்தை எல்லாம்
நிற்கவைத்தார் இன்றைக்கும் கற்கவைத்தார் எம்மை

பண்டிதமா மணியினது பரம்பரையாம் என்றே
பலர் இன்றும் கூறிவரக் காணுகின்றோம் நாமே
கண்டுநிகர் தமிழ்ச்சுவையை எங்கெங்கும் பரப்பி
காலமெலாம் பணிசெய்த அவர்புகழைத் தொழுவோம்.

நாவலரின் பெருமையினை அறிந்த பெரியாருள்
நம்மறிஞர் ஒருவரென நாம் போற்றி நிற்போம்
நாவலரின் சிந்தனையை வாழ்வுதனை அறிந்தே
நாவலரின் நெறியினிலே காலமெலாம் வாழ்ந்தார்

விரிவுரையாளர்ப் பதவிதனில் ஓய்வு பெற்றே
வீட்டிலிருந்த காலத்தும் ஓய்ந்து விடவில்லை
அரிய பல கருத்துக்கள் வகுப்புக்கள் நடத்தி
அள்ளி அள்ளி வழங்கினார் சித்தாந்தம் சிறக்க

அவர் இருந்தவீடு தமிழ்ப்பொழிலாக விளங்க
அங்குவந்து திரண்டபலர் பொழிற்சுகத்தை நுகர்ந்தார்
எவர்க்குமே பயன்பட்ட இப்பெரியார் தம்மை
என்றென்றும் தமிழ் உலகம் போற்றிவரல் கண்டோம்.

No comments:

Post a Comment